விதிகளை மீறி செயல்படும் மணல் குவாரிகளை மூடக்கோரிய வழக்கில் பதில் அளிக்கவில்லை: பொதுப்பணித்துறை அதிகாரி நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

மணல் குவாரிகளை மூடக்கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாததால், பொதுப்பணித்துறை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-08-11 22:15 GMT

மதுரை,

அகில பாரத இந்து மகாசபாவின் மாநில தலைவர் ராஜசேகர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம் திருவளர்ச்சோலை, திருவானைக்கோவில், கொண்டையம் பேட்டை ஆகிய கிராமங்களில் உள்ள மணல் குவாரிகளில் தொடர்ந்து விதிமீறல்கள் நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மணல் அள்ள வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் இரவு பகலாக மணல் அள்ளப்படுகிறது.

மேலும் ஒரு குவாரிக்கு 2 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தி தான் மணல் அள்ள வேண்டும் என்ற விதியை மீறி 8 பொக்லைன் எந்திரங்கள் வைத்து மணல் அள்ளுகிறார்கள். குவாரிகளுக்கு அருகில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்லணை அமைந்து உள்ளது. குவாரிகளால் இந்த அணைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதால் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே விதிமீறல்களில் ஈடுபடும் இந்த குவாரிகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரி வருகிற 21–ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்