மண்டைக்காடு அருகே வீடுபுகுந்து பெண்ணிடம் 9½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மண்டைக்காடு அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 9½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2017-08-11 23:00 GMT
மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு அருகே உள்ள கருமன்கூடலை சேர்ந்தவர் சைலஸ் (வயது40), கூலி தொழிலாளி. இவரது மனைவி அஜிதா ராணி (32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சைலஸ் தினமும் அதிகாலையில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை 5.30 மணிக்கு சைலஸ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.
அதன்பிறகு வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. வீட்டிற்குள் அஜிதா ராணியும், அவரது குழந்தைகளும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, முன்பக்க கதவு வழியாக மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். அவர் முகமூடி, மழை கோட்டு அணிந்திருந்தார். வீட்டிற்குள் புகுந்த அந்த நபர் அஜிதா ராணியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். உடனே, அஜிதாராணி தங்க சங்கிலியை பிடித்துக்கொண்டு கொள்ளையனிடம் கடுமையாக போராடினார்.

திடீரென கொள்ளையன் அஜிதா ராணியை சரமாரியாக தாக்கினார். இதில் தங்க சங்கிலி இரண்டு பகுதிகளாக அறுந்து ஒரு பகுதி அஜிதா ராணியின் கையிலும், மற்றொரு பகுதி கொள்ளையன் கையிலும் சிக்கியது. தொடர்ந்து, அவர், “திருடன்... திருடன்...” என சத்தம் போட்டார்.

9½ பவுனுடன் ஓட்டம்

உடனே கொள்ளையன் அவனது கையில் சிக்கிய 9½ பவுன் தங்க சங்கிலியுடன் தப்பியோடிவிட்டான். அப்போது, கொள்ளையன் சட்டையின் மேல் அணிந்திருந்த மழை கோட்டு அஜிதாராணி கையில் சிக்கிக்கொண்டது.
அஜிதாராணியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் கொள்ளையன் தலைமறைவாகி விட்டான். இதுகுறித்து மண்டைக்காடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

வலைவீச்சு

கொள்ளையன் விட்டு சென்ற கோட்டை போலீசார் கைப்பற்றி, கொள்ளையனின் அடையாளம் குறித்து கேட்டறிந்தனர்.
சைலஸ் தினமும் அதிகாலையில் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மண்டைக்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்