திருப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் திடீர் சாவு

திருப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் திடீரென இறந்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கல்வீசி தாக்கியதில் மருத்துவமனையின் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-08-11 22:30 GMT

வீரபாண்டி,

திருப்பூர் வீரபாண்டி கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சதாசிவம்(வயது 32). பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி பவித்ரா. இவர்களுடைய மகன் ரித்திஷ்(6). இவன் அந்தப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தான். ரித்திசுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடந்த வாரம் அவனுடைய பெற்றோர், திருப்பூர்–தாராபுரம் ரோடு பலவஞ்சிப்பாளையம் பிரிவு அருகே உள்ள ஸ்ரீசக்தி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிறுவனை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரித்திசுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை மகனை அழைத்துக்கொண்டு வந்த சதாசிவம், ஸ்ரீசக்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காலை 9 மணி அளவில் சிறுவன் ரத்த கசிவு காரணமாக இறந்து விட்டதாக டாக்டர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் கதறி துடித்தனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டனர். சரியான சிகிச்சை அளிக்காததால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் திடீரென்று மருத்துவமனை மீது கற்களை வீசி தாக்கினார்கள். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு திருப்பூர் ஊரக போலீசார் மற்றும் வீரபாண்டி போலீசார் விரைந்து வந்தனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் தங்கவேல், வடக்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக தீர்வு காணப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு சிறுவன் ரித்திசின் உடலை பெற்று அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று மதியம் 1 மணி வரை அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்