மூலனூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் 2–வது நாளாக தொடர்ந்து வருமானவரி அதிகாரிகள் சோதனை

மூலனூரில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் விடிய, விடிய வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2017-08-11 22:45 GMT

மூலனூர்,

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் சுமார் 30–க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் அந்தபகுதியில் உள்ளவர்களுக்கு தினசரி, வாரம், மாதம் என்ற அடிப்படையில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்துவருகிறார்கள்.

இந்தநிலையில் இந்த நிதி நிறுவனங்கள் முறையான கணக்கு வழக்கு காண்பிக்காததால் அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக வருமானவரி அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் காலை சென்னை, கோவையில் இருந்து வருமானவரி அதிகாரிகள் மூலனூருக்கு வந்தனர்.

அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மூலனூர் பகுதியில் உள்ள தில்லையம்மன், மாருதி, சுமங்கலி, சுரபி உள்பட 8–க்கும் மேற்பட்ட நிதிநிறுவனங்கள் மற்றும் நிதிநிறுவன உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதனால் மூலனூரில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சோதனையின் போது, சில நிறுவனங்களில் ஏராளமான சொத்து ஆவணங்கள் இருப்பதும், ஏராளமானோருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வரிஏய்ப்பு செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து நிதிநிறுவன உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு 11 மணி அளவில் மூலனூரில் உள்ள அருவி பைனான்ஸ் என்ற நிதிநிறுவனத்துக்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். பின்னர் அந்த நிதிநிறுவனத்தின் உரிமையாளர் அருவிமணி வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அருவிமணி வீட்டில் விடிய, விடிய நடந்த இந்த சோதனை நேற்று 2–வது நாளாக நீடித்தது.

இந்த சோதனையின் போது அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. இதுபற்றி அதிகாரிகள், அருவிமணியிடம் பல்வேறு கேள்விகளை கேட்டதாக தெரிகிறது. இந்த சோதனை நேற்று இரவும் தொடர்ந்தது. மூலனூரில் நிதிநிறுவனங்கள், வீடுகளில் வருமானவரி சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோல், கரூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள நிதிநிறுவனங்களிலும் வருமான வரிசோதனை நடந்தது. சேலம் தீரன் ஆட்டோ பைனான்ஸ், லோட்டஸ் பைனான்ஸ் ஆகிய நிதிநிறுவனங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை வருமானவரி அதிகாரிகள் கார்களில் வந்து சோதனை மேற்கொண்டனர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எதாவது ஒரு இடத்தில் கந்து வட்டி தொழில் நடத்துவார்கள் என்பது மூலனூரை பற்றி தெரிந்தவர்கள் கூறுவது வழக்கம். அந்த அளவிற்கு இப்பகுதியில் நிதிநிறுவன தொழில் முக்கியமான தொழிலாகும். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் தான் மூலனூர் கந்துவட்டி கடைகாரர்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.

பொதுவாக இங்கு நடைபெறும் நிதிநிறுவனங்களில் சுமார் 10–க்கும் மேற்பட்டவர்கள் பங்குதாரர்களாக இருப்பது வழக்கம். இவர்கள் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலங்களில் வட்டிகடை நடத்துவர்களாகவே இருப்பார்கள். மேலும் இந்த நிதி நிறுவனம் சார்பில் மாதந்தோரும் ரூ.1 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.10லட்சம் அளவிற்கு சீட்டு நடத்துவது வழக்கம் வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் தங்களது ஏ.டி.எம். கார்டுகளை கொடுத்து சென்று விடுவார்கள் அதில் அங்கிருந்து வங்கிகளில் அவர்களது கணக்கில் செலுத்தினால் இங்கு நிதிநிறுவனம் நடத்துபவர்கள் ஏ.டி.எம் மூலம் எடுத்துக்கொள்வது வழக்கம்.

அப்படி சேர்க்கப்படும் பணத்தை நிதிநிறுவனத்தில் இருந்து வீட்டு பத்திரங்கள், சொத்து பத்திரங்கள், வாகன பத்திரங்கள் மீது கடன்கள், தினவட்டி, மாதவட்டி என கொடுத்து வசூலிப்பது வழக்கம். தற்போது இவர்களின் மீது வந்த புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் நேற்று 2–வது நாளாக சோதனை நடத்திவருகிறார்கள். இதுபற்றி அறிந்த திருப்பூர், தாராபுரம், பல்லடம், காங்கேயம், வெள்ளகோவில் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் முறைகேடாக இயங்கிவரும் பெரும்பாலான நிதிநிறுவனங்கள் நேற்று பூட்டப்பட்டு கிடந்தன. அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்