மாவட்ட வருவாய் அலுவலர் எனக்கூறி அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.31 லட்சம் மோசடி

மாவட்ட வருவாய் அலுவலர் எனக்கூறி ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.31 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், பெண் புகார் செய்தார்.

Update: 2017-08-11 22:15 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் சட்டாம்பிள்ளைதெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார், அதில், எனது கணவர் சக்திவேல் ஈரோட்டில் பாத்திரக்கடையில் வேலை செய்து வருகிறார். திண்டுக்கல்லில் உள்ள ஒரு வங்கியில் வாடிக்கையாளர் சேவை மையத்தில், எனது தம்பி வடிவேல் வேலை செய்கிறார்.

இந்த நிலையில் எனது தம்பியை நான் பார்க்க சென்றபோது, ஒட்டன்சத்திரம் போடுவார்பட்டியை சேர்ந்த ஒருவர் அறிமுகம் ஆனார். அப்போது அவர் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக வேலை செய்வதாக கூறினார். பின்னர் ரூ.2 லட்சம் கொடுத்தால் எனது தம்பிக்கு கலெக்டர் அலுவலகத்தில் எழுத்தர் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார். அதை நம்பி நான் ரூ.2 லட்சம் கொடுத்தேன்.

இதேபோல் வேலை வாங்கி தருவதாக கூறியதால், ஈரோட்டை சேர்ந்த அசோக்குமார், பாலாஜி, பிரவீணா, பிருந்தா, சூரியா, சத்யா, வசந்தி, குமார் ஆகிய 8 பேரிடம் தலா ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் வாங்கி அவரிடம் கொடுத்தேன். இதைத்தவிர எனது தம்பிக்கு பழக்கமுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த சக்திவேல், செல்வகனி, அங்கன், குமார் ஆகியோரிடம் வேலை வாங்கி தருவதாக அந்த நபர் ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் வாங்கினார்.

அதன்பின்னர், அவர் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்தது. எனவே, எனது பணத்தை திரும்ப தரும்படி கேட்டபோது என்னை மிரட்டினார். இதை கேள்விபட்டு ஈரோட்டை சேர்ந்த 8 பேரும் பணம் கேட்டு எனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும், என்று கூறியிருக்கிறார்.

இந்த புகார் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்