கீழ்பவானி வாய்க்காலில் உயிர்நீர் திறக்கக்கோரி த.மா.கா.வினர் உண்ணாவிரத போராட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் உயிர்நீர் திறக்கக்கோரி த.மா.கா.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-11 22:45 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குடிநீருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கால்நடைகளுக்கு குடிக்கக்கூட தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்கால்களில் உயிர்நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் உயிர்நீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.

போராட்டத்துக்கு கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் மணியன், சின்னுசாமி, சாம்ராட் ஆர்.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜ், மத்திய மாவட்ட பார்வையாளர் ஆர்.ஆறுமுகம், கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் செ.நல்லசாமி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, கே.எம்.ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்