கால்வாயை சீரமைக்கக்கோரி 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலையில் கால்வாயை சீரமைக்க கோரி 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் திருவண்ணாமலை நகரத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்தது. சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.திருவண்ணாமலை போளூர் ரோட்டில் உள்ள மாந்தோப்பு பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் சாலையோரம் உள்ள கடைகளிலும் மழைநீர் புகுந்தது. கழிவுநீர் கால்வாய் சரிவர அமைக்கப்படாததால் மழைநீர் சாலைகளில் தேங்கியது. இந்த நிலையில் நேற்று காலையில் திருவண்ணாமலை போளூர் ரோட்டில் பொதுமக்கள் கால்வாயை சீரமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பழனி, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.பின்னர் அங்கு வந்த திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஷ்வரி, நகராட்சி ஆணையர் பாரிஜாதம் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கால்வாய்கள் மற்றும் மழைநீர் புகுந்த வீடுகளை பார்வையிட்டனர். கால்வாய் அடைப்புகள் 3 நாட்களில் சீர் செய்யப்படும் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
இதேபோல திருவண்ணாமலை அடிஅண்ணாமலை பகுதியில் கழவுநீர் கால்வாய் அடைப்புகள் தூர்வார வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அடிஅண்ணாமலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அந்த பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தனர். பின்னர் போலீசார் செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.