பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடல்

புவனேஸ்வரிபேட்டையில் பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் அங்கு இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூட கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

Update: 2017-08-10 23:56 GMT

குடியாத்தம்,

குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 11 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் உள்ள ஒரு கடையை தவிர மற்ற டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொண்டசமுத்திரம் ஊராட்சியில் சிவமதி கார்டன், சாமியார்மலையை அடுத்த மாணிக்கம் நகர், அன்னை சோனியா நகர் மற்றும் செதுக்கரை பொன்னம்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

குடியாத்தம் டவுன் பகுதியில் இந்த கடை கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நகரில் ஒரே கடை மட்டுமே இருப்பதால் கடையில் ‘குடி’மகன்கள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிந்தது. ஏற்கனவே இந்த கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த டாஸ்மாக் கடை சீவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. மாலை வேளைகளில் ‘குடி’மகன்கள் டாஸ்மாக் கடை அருகிலேயே ரோட்டிலேயே அமர்ந்து மதுஅருந்தி வருவதால் அப்பகுதி வழியாக சென்று வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் கிராமங்களில் இருந்து வரும் பள்ளி மாணவிகள் இப்பாதையின் வழியாக வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாலையில் ‘குடி’மகன்களின் தொல்லையால் இப்பாதை வழியாக செல்லும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் டாஸ்மாக் கடை திறந்ததும் 300–க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை மூடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ், சீனிவாசன், செந்தாமரை, சப்–இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, கிரிஜா, நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனையடுத்து தாசில்தார் நாகம்மாள், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள், மாவட்ட கலெக்டர் ராமனிடம் பொதுமக்களின் தொடர் போராட்டம் குறித்து தெரிவித்தனர்.

இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோரது பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ராமன் புவனேஸ்வரிபேட்டை டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

டாஸ்மாக் கடை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பல ஆண்டுகள் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு ஏற்படுத்தி கொடுத்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, தாசில்தார் நாகம்மாள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கை எடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தனர். சிலர் அதிகாரிகளின் வாகனங்களின் முன்பு தரையில் படுத்து வணங்கி நன்றி தெரிவித்தனர். மேலும் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்