கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்ய சொல்வதாக புகார்

ரத்தினகிரி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பூட்டி மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2017-08-10 23:56 GMT

ஆற்காடு,

ரத்தினகிரியை அடுத்து பூட்டுத்தாக்கு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை உள்ளது. பள்ளியில் 127 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த பூம்பாவை என்பவர் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மேலும் பள்ளியில் 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியை பூம்பாவை, பள்ளியில் உள்ள கழிவறையையும், அவர், சாப்பிட்டுவிட்டு வைக்கும் பாத்திரங்களை மாணவர்களை சுத்தம் செய்ய சொல்வதாகவும், மேலும் அவர், மாணவர்களை ஆபாசமாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று முன்தினம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் குணசேகரனுக்கு புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர், பள்ளிக்கு வந்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் நேற்று காலையில் மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியின் நுழைவு வாயிலின் கேட்டை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரிடம், பிள்ளைகளை பள்ளிக்குள் அனுப்புங்கள் அதிகாரிகள் வந்தவுடன் பேசிக்கொள்ளலாம் என்றனர். இதனையடுத்து பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிக்குள் அனுப்பினர்.

பின்னர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் குணசேகரன், வாலாஜா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தலைமை ஆசிரியை மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினர்.

இதனையடுத்து ஒருவார காலத்திற்குள் பள்ளிக்கு வேறு தலைமை ஆசிரியை நியமிப்பதாகவும், தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். அதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்