திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தரிடம் டி.டி.வி.தினகரன் ஆசி பெற்றார்
திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தரிடம், அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆசி பெற்றார். தொடர்ந்து மலையை சுற்றி காரில் கிரிவலமும் சென்றார்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தர், பச்சை நிறத்தில் பெரிய சால்வையை போர்த்திக் கொண்டு மவுனமாகவே அமர்ந்திருப்பார். அவருக்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் உண்டு.
அவரை தரிசிக்க செல்பவர்கள் மூக்குப்பொடியை வழங்கி ஆசி பெறுவார்கள். எப்போதும் குனிந்த தலையுடனேயே இருக்கும் மூக்குப்பொடி சித்தர் நம்மை நிமிர்ந்து பார்த்துவிட்டால் யோகம் அடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.அந்த வகையில் தினகரன் நேற்று மூக்குப்பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆகாஸ் ஓட்டலில் சித்தர் கீழ்தளத்தில் ஓரமாக அமர்வது வழக்கம். அவரை தினகரன் நேரில் சென்று கையெடுத்து கும்பிட்டார். பின்னர் அவர் முன்னால் சற்று தூரத்தில் அமர்ந்து ஆசி பெற்றார். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக அங்கிருந்த தினகரன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.
இதையடுத்து அவர் காரில் அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் வந்தார். பின்னர் காரில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டு சென்றார்