என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் உடலை வாங்க மறுத்து மறியல் போக்குவரத்து பாதிப்பு

தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்யக்கோரி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் உடலை வாங்க மறுத்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2017-08-10 23:45 GMT

புதுச்சேரி,

புதுவை மேட்டுப்பாளையம் தர்மாபுரியை சேர்ந்தவர் தயாளன் (வயது 47). என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தலின் போது செலவு செய்வதற்காக அதிக அளவில் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.

அதை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் பிரச்சினையால் தயாளனுக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் கணவருடன் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

தற்கொலை

இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த தயாளன் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தயாளனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு தயாளனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அப்போது அவர்கள் தயாளன் தற்கொலை செய்து கொண்டதற்கு முக்கிய பிரமுகர் ஒருவர் தான் காரணம். அவரிடம் தயாளன் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்ததும் அதை திரும்பக் கேட்டு வந்ததாகவும் தெரிகிறது. அவர் கொடுத்த நெருக்கடி காரணமாகத் தான் தயாளன் தற்கொலை செய்துள்ளார். எனவே அந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

சாலை மறியல்

இதையொட்டி தயாளனின் உடலை வாங்க மறுத்து வழுதாவூர் சாலையில் ஆஸ்பத்திரி எதிரே அவரது ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தயாளனுக்கு கடன் கொடுத்த சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதன்பின் மருத்துவமனையில் இருந்து தயாளனின் உடலை வாங்கிச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்