அரசின் காலம் தாழ்ந்த செயல் சேலத்தில் ஜி.கே.மணி பேட்டி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை என்பது அரசின் காலம் தாழ்ந்த செயல் என்று சேலத்தில் ஜி.கே.மணி தெரிவித்தார்.

Update: 2017-08-10 23:09 GMT
சேலம்,

பா.ம.க.வின் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் சேலம் 5 ரோட்டில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு, அவ்வழியாக வந்தவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

காலம் தாழ்ந்த செயல்

தமிழகத்தில் ‘டெங்கு‘ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனால், பொதுமக்கள் பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. அதே வேளையில் விழிப்புணர்வு என்பது அவசியம். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கை போதாது. இது காலம் தாழ்ந்த செயல் ஆகும். இனிவரும் காலங்களிலாவது டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்திட வேண்டும். குறிப்பாக டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பேரூர், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும்

பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் 60 வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். மேட்டூரில் இன்று(வெள்ளிக்கிழமை) வழங்கப்படும். இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அருள், பசுமை தாயகம் மாநில துணை அமைப்பாளர் சத்ரியசேகர், மாவட்ட செயலாளர்கள் கதிர் ராசரத்தினம், சாம்ராஜ், துணை செயலாளர் அண்ணாமலை, மகளிர் அணி நிர்வாகி கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்