தேசிய ஊரக வேலை திட்டப்பணி வழங்கக்கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டம்

தேசிய ஊரக வேலை திட்டப்பணி வழங்கக்கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-10 22:43 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார்நகர், சிவனேசன் நகர், மேட்டுத்தெரு மற்றும் ஐ.ஆர்.டி. சாலை பகுதியில் வசிக்கும் சுமார் 134 பயனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வந்த பணி தற்போது முறையாக வழங்கப்படவில்லை என்றும், வேலை செய்பவர்கள் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.

மேலும் ஒரு சிலருக்கு வேலை செய்ததற்கான சம்பள பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3–ந்தேதி இந்த பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

மீண்டும் போராட்டம்

இந்த நிலையில் தங்களது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என கூறியும், தங்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நேற்று பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தேசிய ஊரக வேலை திட்ட பணிக்கான ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் தலைமையில் மீண்டும் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்