ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனர்.;

Update: 2017-08-10 22:30 GMT

ஆவடி,

ஆவடி அடுத்த பூம்பொழில் நகரைச் சேர்ந்தவர் ரகுபதி. செங்குன்றத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி (வயது 55). சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு இருவரும் வேலைக்கு சென்றனர். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

நகையை திருடிய மர்மநபர்கள், முன்பக்க கதவை உள்தாழ்ப்பாள் போட்டு விட்டு, பின்பக்க கதவை திறந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் குறித்து ரேணுகாதேவி ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

* மெரினாவில் மோட்டார் சைக்கிள் திருடியதாக அஜித்குமார் (21) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

* சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 6 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்