பலத்த மழை: தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பயணிகளுடன் சிக்கிய அரசு பஸ் மீட்பு

செந்துறை அருகே பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. அதில் பயணிகளுடன் சிக்கிய அரசு பஸ் மீட்கப்பட்டது.

Update: 2017-08-10 23:15 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் செந்துறை பகுதிகளில் உள்ள வரத்துவாரி ஓடைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஆனால் வரத்துவாரிகளின் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாலும், தூர்வாரப்படாத காரணத்தாலும், மழைநீர் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து ஓடியது. செந்துறை தாலுகா அலுவலகத்தையும் மழைநீர் சூழ்ந்தது.

இந்தநிலையில் வங்காரம் கிராமத்தில் இருந்து செந்துறை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ் தோப்பேரி அருகே உள்ள நிண்ணியூர் ஓடையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் டிரைவர், கண்டக்டர் தவிர 3 பயணிகள் மட்டுமே இருந்தனர்.

மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதில், அந்த தற்காலிக தரைப்பாலம் அரிக்கப்பட்டு இருந்தது. இரவு நேரம் என்பதால் தரைப்பாலம் அரிக்கப்பட்டு இருந்தது டிரைவருக்கு தெரியவில்லை. தரைப்பாலம் மீது பஸ் வந்தபோது, திடீரென நகர முடியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு, பயணிகள் 3 பேரையும், கண்டக்டரையும் இறக்கிவிட்டு, தானும் இறங்கி தப்பினார். இதில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர், சிகிச்சைக்காக செந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மழை பெய்ததால், தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த குழாய்களுக்கு மேல் போடப்பட்டு இருந்த மண் முழுவதும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் தரைப்பாலம் உடைந்து பஸ் அந்தரத்தில் தொங்கியது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்து, 2 கிரேன்கள் மூலம் பஸ்சை மீட்டனர். அப்பொழுது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இந்த விபத்துக்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களே காரணம் என்றும், பணிகள் தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும் பாலப்பணியை முடிக்காத காரணத்தாலேயே இந்த விபத்து ஏற்பட்டது என்றும் கூறி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினார்கள். பின்னர் மீட்கப்பட்ட பஸ்சை அரியலூர் பணிமனைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். 

மேலும் செய்திகள்