பனை மரத்தில் கார் மோதியதில் கீரனூர் வியாபாரி பலி உருக்கமான தகவல்கள்

நண்பர்களுடன் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்ற போது பனைமரத்தில் கார் மோதியதில் கீரனூர் வியாபாரி பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-08-10 23:00 GMT
கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் ஜகுபர் அலி (வயது 40). பழைய பேப்பர் வியாபாரி. இவரும், இவரது நண்பர்க ளான அதே பகுதியை சேர்ந்த முகமது மைதீன், மகபூப் பாட்ஷா, கமாலுதீன் சேக், அலாவுதீன் ஆகியோர் நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 5 பேரும் ஒரு காரில் புறப்பட்டு சென்றனர். காரை ஜகுபர் அலி ஓட்டினார்.

நேற்று முன்தினம் அதிகாலை கடையநல்லூருக்கும், சொக்கம்பட்டிக்கும் இடையே உள்ள தனியார் பள்ளி அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் காரை ஓட்டி வந்த ஜகுபர் அலி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த மற்ற 4 பேரும் படு காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஜகுபர் அலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ஜகுபர் அலிக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் பலியான ஜகுபர் அலியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது. பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜகுபர் அலி குழந்தையின் பிறந்த நாளை கடந்த வாரம் தான் கொண்டாடி உள்ளனர். அதற்குள் ஜகுபர் அலி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்