சுற்றுப்புறத்தை பாதுகாப்பது பெண்களின் கடமை கலெக்டர் மலர்விழி பேச்சு

தன் சுத்தம் மட்டும் போதாது, சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க வேண்டியது பெண்களின் கடமை என்று கலெக்டர் மலர்விழி கூறினார்.

Update: 2017-08-10 22:45 GMT
சிவகங்கை,

சிங்கம்புணரி அருகே உள்ள உலகம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. முகாமில் 46 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 86 ஆயிரத்து 700 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

எந்த ஒரு திட்டத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கும். அந்த திட்டங்களை தெளிவாக தெரிந்து கடமையை செய்பவர்கள் தங்களது உரிமையை பெறமுடியும். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. பெண்கள் நாட்டின் கண்கள். அவர்களுக்கு செய்யும் நலத்திட்டங்கள் அவர்களது குடும்பத்தை சென்றடையும். கர்ப்பிணிகளுக்கு ரூ.18 ஆயிரம், சமூகநல துறையின் மூலம் திருமண உதவிக்கான தாலிக்கு தங்கம் உள்பட எண்ணற்ற திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.

அரசு கொடுக்கக்கூடிய திட்டங்கள் அனைத்தும் அடுத்த தலைமுறைக்கான முதலீடு. பெண்களை கல்வி அறிவுடையவர்களாக உருவாக்கிட அரசு தரும் பரிசுதான் இந்த திட்டங்கள்.

மேலும் பெண்கள் வீட்டில் சேமித்து வைக்கும் நீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் உருவாகாமல் தடுக்க தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மேலும் தண்ணீரை பாதுகாப்புடன் மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான எளிய வழிமுறைகளை பின்பற்றினால் சிவகங்கை மாவட்டத்தை டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும். தன் சுத்தம் மட்டும் போதாது, தன்னை சார்ந்த சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க வேண்டியது பெண்களின் கடமை. குடும்ப ஆரோக்கியம் பெண்கள் கையில்தான் உள்ளது. எனவே தான் எல்லா திட்டங்களும் பெண்களை முன்னிலைப்படுத்தி அரசு செயல்படுத்துகிறது. மேலும் கழிப்பறையின் அவசியம் உணர்ந்து கழிப்பறை கட்டி திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாவட்டமாக விளங்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, வேளாண்மை இணை இயக்குனர் செல்வம், சிங்கம்புணரி வட்டாட்சியர் தனலெட்சுமி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்