பலத்த மழை கண்மாய் கரை உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது

காரியாபட்டி பகுதியில் பெய்த பலத்த மழையால் கண்மாய் கரை உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. அதிகாரிகள் இந்த கண்மாயை தூர்வாரி பராமரித்து இருந்தால் தண்ணீர் வீணாக வெளியேறியதை தடுத்திருக்கலாம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Update: 2017-08-10 23:00 GMT
காரியாபட்டி,

தமிழகம் முழுவதும் பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. குடிநீர் கேட்டு ஆங்காங்கே பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.

நிலைமை இவ்வாறு இருந்தும் தண்ணீரின் முக்கியத்துவம் கருதி அதனை சேமித்து வைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்பட வில்லை. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி காரியாபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் நீர் ஆதாரங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. நேற்று முன் தினம் மாலையும் காரியாபட்டி பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.

இதன் காரணமாக காரியாபட்டி அருகே உள்ள காரைக்குளம் கண்மாய்க்கு அதிக நீர் வரத்து ஏற்பட்டது. ஆனால் கண்மாயை தூர்வாரி பராமரிக்காததால் கரை உடைந்து தண்ணீர் மளமளவென வெளியேறி வீணாகி விட்டது.

அலட்சியம்

வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் நீர் ஆதாரங்களை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. காரைக்குளம் கண்மாய் நிரம்பி கரை உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியதால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.

அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக மழை பெய்தும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகள்