காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,500 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2017-08-10 23:00 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக வினாடிக்கு 6,500 கன அடி முதல் 7000 கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தமிழக- கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று காலை கர்நாடகா - தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக இருந்தது. மாலை நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதன் காரணமாக நேற்று ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையொட்டி ஒகேனக்கல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பார்வை கோபுரம், நடைபாதை, தொங்குபாலம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சிலர் தங்களுடைய செல்போனில் காவிரி ஆற்றின் அழகையும், அருவிகளின் அழகையும் படம்பிடித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் காவிரியாற்றின் கரையோர பகுதிகள் மற்றும் அருவிகள், அருவிகளுக்கு செல்லும் நடைபாதை ஆகிய பகுதிகளில் போலீசார், தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்