ரூ.7¾ லட்சம் லஞ்சம் பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.7¾ லட்சம் லஞ்சம் பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2017-08-11 01:30 GMT
விழுப்புரம்,

விக்கிரவாண்டி தாலுகா ஒரத்தூரை சேர்ந்தவர் லட்சுமிபிரபு (வயது 45). இவர் வீட்டுமனை தருவதாக கூறி கடந்த 2004 முதல் 2014 வரை விழுப்புரம்- திருச்சி சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வார குலுக்கல் சீட்டு நடத்தி வந்தார். இந்தநிலையில் லட்சுமிபிரபு உள்பட 7 பேர் சேர்ந்து பணம் மோசடி செய்ததாக சிலர் விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2016-ல் புகார் செய்தனர்.

அந்த புகாரின்பேரில் விசாரணைக்கு வருமாறு லட்சுமிபிரபுவை பொருளாதார குற்றப்பிரிவில் அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கோவிந்தராஜலு அழைத்தார். இதையடுத்து இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு வந்த லட்சுமி பிரபுவிடம் விசாரணை அதிகாரியாக இருந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜலு புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பேரம் பேசி அவரிடம் இருந்து லஞ்சமாக மொத்தம் ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்தை பெற்றுள்ளார். மீண்டும் பணம் தருமாறு கேட்டு லட்சுமிபிரபுவை கோவிந்தராஜலு மிரட்டினார். அவர் கேட்டப்படி பணம் தராததால் லட்சுமிபிரபு உள்பட 7 பேர் மீது கோவிந்தராஜலு வழக்குப்பதிவு செய்தார்.

இதுகுறித்து லட்சுமிபிரபு, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியதன்பேரில் அவர்கள் உத்தரவின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜலு மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அவர் ஊட்டியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் லட்சுமிபிரபு, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், என் மீது புகார் கூறிய 33 பேர்களில் 15 பேருக்கு அவர்கள் கட்டிய பணத்தை கொடுத்துவிட்டேன். மீதமுள்ள 18 பேருக்கு வீட்டுமனையாக தருவதாக கூறி அவர்களிடம் எழுதிக்கொடுத்துள்ளேன். அதற்கான ஏற்பாட்டையும் செய்து வருகிறேன். இந்நிலையில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜலு மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரிடமிருந்து என்னுடைய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்