ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதை கண்டித்து கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்த வாகனங்களுடன் உரிமையாளர்கள் குவிந்தனர். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-10 23:00 GMT
கோத்தகிரி,

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதனால் மலை மாவட்டமான நீலகிரிக்கு அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் தீவிரமாக கண் காணிக்கப்படுகிறது. அப்போது விதிகளை மீறும் ஒரு சில வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதை கண்டித்தும், அதிக அபராதம் வசூலிப்பதை கண்டித்தும் வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று கோத்தகிரியில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில், நீலமலை அனைத்து தொழிலாளர் சங்க வாகனபிரிவு, லாரி ஓட்டுனர்கள் சங்கம், மினி ஆட்டோ, பிக்கப், ஜீப் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கம், கட்டபெட்டு, அரவேணு, கைக்காட்டி, கீழ்கோத்தகிரி, சோலூர்மட்டம், கூக்கல்தொரை பகுதிகளில் உள்ள அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிக்கு வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் கோத்தகிரி போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடும் நிலை இருப்பதால் அங்கு சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதி போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் சரக்கு வாகனங்களுடன் உரிமையாளர்கள், சங்க நிர் வாகிகள், ஓட்டுனர்கள் மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்த குவிந்தனர். அங்கு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்காததால் மார்க்கெட் திடலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் சங்க நிர்வாகிகளிடம் அனுமதி இல்லாததால் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நீலமலை அனைத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பாலன், கணேஷ், சுப்ரமணி ஆகியோரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ் (வெலிங்டன்), லட்சுமணன் (குன்னூர்), கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர்கள் நசீர், பாலன், தீபன், சக்கரவர்த்தி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் தெரிய வேண்டும். இதுபற்றி இன்ஸ்பெக்டரிடம் பேச கோத்தகிரி போலீஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே ஆர்ப்பாட்டத்துக்கு முயன்றவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக மார்க்கெட் திடலுக்கு 3 அரசு பஸ்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. இதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், சங்க நிர்வாகிகள் குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு கொடுக்கும்படி போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சங்க நிர்வாகிகள் குன்னூரில் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்க சென்றனர்.

ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் 50 ஜீப்கள், 60 சரக்கு வாகனங்கள், 40 சரக்கு ஆட்டோக்களின் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வாகனங்களை மார்க்கெட் திடலில் நிறுத்தி வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலையில் தினமும் ஏற்ற இறக்கம் உள்ளது. 3 மாதத்துக்கு ஒரு முறை வாகன வரி, ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் கட்டணம், மோட்டார் வாகன ஆய்வாளரிடம் தகுதி சான்று போன்றவற்றை முறையாக பெற்று வாகனங்களை இயக்கி வருகிறோம். இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களிடம் அதிகபாரம் ஏற்றிச் செல்வதாக கூறி அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், ஓட்டுனர் உரிமத்தையும் பறித்துக்கொண்டு ஆர்.டி.ஓ. அலுவலகம் சென்று வாங்க சொல்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். இதனால் தொழில் வெகுவாக பாதிப்படைந்து உள்ளது.
விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் அறுவடை செய்த விளை பொருட்களை எவ்வாறு அளந்து லாரிகளில் ஏற்றிச் செல்ல முடியும். மேலும் 3 முறை ஓட்டுனர் உரிமம் பறி முதல் செய்யப்பட்டால் உரிமமே ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பால் ஓட்டுனர் தொழிலில் ஈடுபடுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே கோர்ட்டு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்