கூடலூர் பகுதியில் வேகமாக செல்லும் ஜீப்களால் அடிக்கடி விபத்து

கூடலூர் பகுதியில் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வேகமாக செல்லும் ஜீப்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-08-10 22:45 GMT
கூடலூர்,

கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் கேரள மாநிலத்துக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பத்துமுறி, கடசிக்கடவு, ஜக்குபள்ளம், சாஸ்தான்நடை, ஆனவிலாசம், புளியமலை, கட்டப்பனை, வண்டிப்பெரியார் ஆகிய பகுதிகளில் உள்ள ஏலக்காய், காபி, மிளகு தோட்டங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்கள் தினமும் அதிகாலையில் சென்று விட்டு மாலையில் தேனிக்கு திரும்பி வருகிறார்கள். இவர்களை ஏற்றிச் செல்வதற்காக நூற்றுக்கணக்கான ஜீப்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சரக்கு வாகனங்களிலும் அவர்களை ஏற்றி செல்கின்றனர். இந்த ஜீப்கள் காலை 5.30 மணி முதல் காலை 6.30 மணி வரை அதிக வேகத்தில் சென்று வருகின்றன. இந்த ஜீப்கள் அதிக வேகத்தில் சென்று வருவதால் கூடலூர் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பலர் உயிர் இழந்து வருகிறார்கள்.

மேலும் ஏராளமான ஜீப்கள் இயக்கப்படுவதால் போட்டி போட்டு செல்கிறார்கள். இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோன்று மாலையில் 3.30 மணி முதல் 5.30 மணி வரை இந்த ஜீப்கள் தொழிலாளர் களை ஏற்றிக் கொண்டு அதிக வேகத்தில் திரும்பி வருகின்றன. இதனால் பள்ளிக் கூடம் முடிந்து வீட்டுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகிறார் கள்.

எனவே போக்குவரத்து போலீசார் துரித நடவடிக்கை எடுத்து வேகமாக செல்லும் ஜீப்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நகரில் முக்கிய பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்