பா.ஜ.க. வுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி நாராயணசாமி கருத்து

குஜராத்தில் நடந்த டெல்லி மேல்சபை எம்.பி.க்கான தேர்தலில் பா.ஜ.க.வுக்கு முதல் சம்மட்டி அடி விழுந்துள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2017-08-09 23:45 GMT

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்க நாள் விழா நேற்று நடந்தது. மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். விழாவில் தியாகிகளை முதல்–அமைச்சர் நாராயணசாமி கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:–

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் நிறைந்த காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு. சுதந்திரத்திற்காக பாடுபட்டது காங்கிரஸ் தான். மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சிக்கு இதுபோன்ற பெருமை ஏதும் கிடையாது.

மத்தியில் சுமார் 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளது. ஆனால் இப்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதீய ஜனதா அரசு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களையே பெயர்களை மாற்றி நிறைவேற்றுகிறார்கள். புதிதாக திட்டம் ஏதும் தரவில்லை.

மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக்கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் வரவு வைப்போம் என்றார்கள். ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாததாக அறிவித்து கருப்பு பணத்தை மீட்போம் என்றார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

அதற்கு அடுத்ததாக ஒரே நாடு ஒரே வரி என்றார்கள். அதன்படி சரக்கு சேவை வரி அமலுக்கு வந்து 40 நாட்கள் ஆகிறது. இதனால் எந்த மாநிலத்திற்கும் வருமானம் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிட்டார்கள். வருடத்துக்கு ஒரு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

நாட்டின் வளர்ச்சி விகிதம் முன்பு 9 சதவீதமாக இருந்தது. இப்போது 6 சதவீதமாக குறைந்துவிட்டது. தொழில் வளர்ச்சி ஒரு சதவீதமாக குறைந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு மக்களைப்பற்றி கவலைப்படாமல் நாட்டில் இந்து, முஸ்லிம் இடையே கலவரத்தை தூண்டப்பார்க்கிறது. நான் இன்னொரு சுதந்திர போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா ஆட்சியில் தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. எதிர்த்து பேசினால் அவர்களது வீட்டில் சோதனை நடத்துகிறார்கள். தனிமனிதர்களை பழிவாங்கும் வகையில் அரசு எந்திரம் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வரும். அதற்கான விதை குஜராத்தில் போடப்பட்டுள்ளது. அங்கு சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேலை தோற்கடிக்க பாரதீய ஜனதா முயற்சி செய்தது. அதற்காக பணபலம், அதிகார பலத்தை துஷ்பிரயோகம் செய்தனர். ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்போது அமகது படேல் வெற்றிபெற்றுள்ளார். பாரதீய ஜனதாவுக்கு குஜராத்தில் முதல் சம்மட்டி அடி விழுந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 ஆண்டில் மட்டும் 64 முறை வெளிநாடு சென்றுள்ளார். இதற்காக ரூ.1000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ள நிலையில் இலவச அரிசி, சென்டாக் நிதி தருவதற்கு முட்டுக்கட்டைபோட வேலை நடக்கிறது. தற்போது அமைச்சரை மிரட்டும் வேலையும் நடக்கிறது. ஆட்டைக்கடித்து மாட்டை கடித்து தற்போது மனிதரை கடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் எதையும் சமாளிக்கும் சக்தி நமக்கு உள்ளது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

மேலும் செய்திகள்