திடீர் பிரேக் போட்டதால் டேங்கர் லாரியில் இருந்து நடுரோட்டில் ஆயில் சிதறியது

திடீர் பிரேக் போட்டதால் டேங்கர் லாரியில் இருந்து ஆயில் வெளியே சிதறி நடுரோட்டில் பரவியது. இதுதெரியாமல் வாகனத்தில் வந்தவர்கள் சறுக்கி விழுந்தனர்.

Update: 2017-08-09 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை ராஜா தியேட்டர் சந்திப்பு வழியாக நகர பகுதிக்கு நேற்று மதியம் ஒரு டேங்கர் லாரி வந்தது. அப்போது போக்குவரத்து சிக்னல் விழுந்ததால் லாரியை டிரைவர் திடீர் பிரேக் போட்டு நிறுத்தினார். இதனால் அந்த லாரியின் மேல் பகுதியில் இருந்து ஆயில் வெளியே சிதறி விழுந்தது. நடு ரோட்டில் ஆயில் கொட்டி பரவியது. இந்தநிலையில் அந்த லாரி அங்கிருந்து சென்று விட்டது.

ரோட்டில் ஆயில் கொட்டிக் கிடந்தது தெரியாமல் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் சறுக்கிக் கொண்டு சென்றனர். சிலர் வண்டியுடன் வழுக்கி விழுந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக வாகனங்களில் வந்தவர்கள் இதுபோல் பாதிக்கப்பட்ட பிறகு தான் அந்த இடத்தில் டேங்கர் லாரியில் இருந்து ஆயில் கொட்டி இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள் மண்ணை கொட்டி சரி செய்ய முயன்றனர். ஆனால் முழுமையாக மண்ணை கொட்ட அவர்களால் முடியவில்லை. இதுதொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர். ஆயில் பரவிக் கிடந்த ரோட்டில் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். இதன்பின் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தடையின்றி சென்றனர். போக்குவரத்தும் அந்த பகுதியில் வழக்கம்போல் நடந்தது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு நகர் பகுதிக்கு வரும் சரக்கு வாகனங்கள் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரையிலும் வந்து செல்ல போலீசார் நேரம் ஒதுக்கி உள்ளனர். எனவே அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தான் சரக்கு வாகனங்கள் வந்து செல்ல வேண்டும்.

ஆனால் ராஜா தியேட்டர் சந்திப்பு அருகே வந்த டேங்கர் லாரி பகல் 10.30 மணியளவில் வந்துள்ளது. போலீசாரால் அனுமதிக்கப்பட வேண்டிய நேரத்துக்கு முன்பே இந்த லாரி வந்து சென்றுள்ளது. அப்போது தான் டேங்கரில் இருந்து ஆயில் சிதறி ரோட்டில் விழுந்து இருப்பதும், இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்