வில்லியனூர் அருகே தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சேதம்

புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த சாத்தமங்கலம் பேட் பகுதியை சேர்ந்தவர் சர்க்கரை, கூலி தொழிலாளி.

Update: 2017-08-09 22:28 GMT

வில்லியனூர்,

 இவர் நேற்று இரவு 10 மணியளவில் குடும்பத்தினருடன் தனது குடிசை வீட்டில் படுத்திருந்தார். திடீரென்று வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது.

இதை பார்த்த சர்க்கரை மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் அங்கு திரண்டு வந்து, தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இந்த நிலையில் பக்கத்தில் உள்ள விஜயகுமார், சாந்தகுமார் ஆகியோரின் குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது. இதுபற்றி வில்லியனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் வந்து சேருவதற்குள் 3 வீடுகளும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தின்போது விஜயகுமார் வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்