டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்–மந்திரி பதவி?

குஜராத்தில் அகமது பட்டேல் வெற்றி பெற்றதன் எதிரொலியாக டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்–மந்திரி பதவியை வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

Update: 2017-08-09 22:23 GMT

பெங்களூரு,

குஜராத்தில் அகமது பட்டேல் வெற்றி பெற்றதன் எதிரொலியாக டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்–மந்திரி பதவியை வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவருக்கு சோனியா, ராகுல் காந்தி தொலைபேசியில் பாராட்டு தெரிவித்தனர்.

குஜராத்தில் இருந்து டெல்லி மேல்–சபையில் காலியாக இருந்த 3 இடங்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் காங்கிரசில் இருந்து விலகி 6 எம்.எல்.ஏ.க்கள் திடீரென பா.ஜனதாவில் சேர்ந்தனர். இதையடுத்து 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அக்கட்சியின் மேலிடம் ஒன்று திரட்டி பெங்களூருவுக்கு அனுப்பியது. அவர்கள் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ‘ஈகிள்டன்‘ என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்கினர். அவர்களை கவனிக்கும் பொறுப்பு மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் வழங்கப்பட்டது. அவரும் அந்த எம்.எல்.ஏ.க்களுடனேயே தங்கினார்.

இந்த நிலையில் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த சொகுசு விடுதியில் கடந்த 2–ந் தேதி சோதனை நடத்தினர். டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்பட 64 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 76 மணி நேரம் நீடித்தது.

இந்த நிலையில் குஜராத்தில் நேற்று முன்தினம் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற டெல்லி மேல்–சபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றார். அகமது பட்டேலின் வெற்றிக்கு டி.கே.சிவக்குமார் தைரியமாக செயல்பட்டு குஜராத் எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு வழங்கியதும் ஒரு காரணம் ஆகும்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று மந்திரி டி.கே.சிவக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, குஜராத் எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்து காங்கிரஸ் வெற்றிக்கு உதவியதற்காக பாராட்டு தெரிவித்தார். மேலும் வரும் நாட்களில் கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பதவியை நிர்வகிக்க தயாராக இருக்குமாறும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. அந்த மாநில பொறுப்பாளராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கர்நாடக துணை முதல்–மந்திரி பதவியை டி.கே.சிவக்குமாருக்கு வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அகமது பட்டேல், திக்விஜய்சிங், கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆகியோரும் டி.கே.சிவக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, பாராட்டு தெரிவித்தனர். அவர்கள் பேசும்போது பெங்களூருவில் தங்கிய குஜராத் எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல் பாதுகாத்து கட்சியை காப்பாற்றிவிட்டீர்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளனர். இதன் மூலம் காங்கிரசில் மந்திரி டி.கே.சிவக்குமாரின் செல்வாக்கு மேலும் அதிகரித்து விட்டது.

மேலும் செய்திகள்