தஞ்சையில் 2½ மணி நேரம் பலத்த மழை 5 வீடுகள் இடிந்தன ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கின
தஞ்சையில் 2½ மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதில் 5 வீடுகள் இடிந்தன. ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கின.
தஞ்சாவூர்,
கோடை காலம் முடிந்த பின்னரும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தஞ்சையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மதியத்துக்குப்பின்னர் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. இரவு 9.30 மணி வரை இடைவிடாது பலத்த மழை பெய்தது.
இதனால் சாலையில் எங்குபார்த்தாலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக தஞ்சை டி.பி.எஸ். நகரில் 1 வீடும், புதிய பஸ் நிலையம் அருகே 1 வீடும், சீனிவாசபுரத்தில் 3 வீடுகளும் என மொத்தம் 5 வீடுகள் இடிந்து விழுந்தன.
ஆனால் யாருக்கும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தஞ்சை– நாஞ்சிக்கோட்டை சாலையில் காவேரி திருமண மண்டபம் அருகே பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் அருளானந்தநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவின் சுற்றுச்சுவர் 50 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது.
தஞ்சை பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி காணப்பட்டது. தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது. இதனால் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டனர். தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை பகுதியிலும் மழைநீர் சாலையில் அதிக அளவில் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
2½ மணி நேரம் கொட்டிய மழையினால் தஞ்சை ரெயில் நிலையத்தில் 1–வது மற்றும் 2–வது நடைமேடை பகுதியில் உள்ள தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் ரெயில்கள் 3, 4, 5 நடைமேடை வழியாக சென்றன. தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டி பகுதியில் நேற்று பகல் முழுவதும் கோடை காலம் போல் வெயில் கொளுத்தியது. இரவு 7 மணியளவில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. சற்று நேரத்தில் இடி மின்னல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தஞ்சையில் நேற்று பெய்த பலத்த மழையினால் மேலவீதி, வடக்கு வீதி பகுதியில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் சாக்கடை வாய்க்கால்களில் அடைப்புகள் ஏற்பட்டதால் மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மழைநீர், சாக்கடை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை மேலவீதியில் உள்ள சங்கரநாராயணன் கோவிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.