பட்டுக்கோட்டை அருகே முன்விரோதத்தில் கணவன்–மனைவிக்கு அரிவாள் வெட்டு

பட்டுக்கோட்டை அருகே முன்விரோதத்தில் கணவன்–மனைவியை அரிவாளால் வெட்டிய தந்தை, மகன்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-08-09 22:01 GMT

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சாந்தாங்காடு–வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 48). விவசாயி. இவருடைய மனைவி கல்யாணி (45). அதே தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும், அய்யாத்துரைக்கும் இடையே பணம் கொடுக்கல்–வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அய்யாத்துரையும், அவருடைய மனைவி கல்யாணியும் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுரேஷ், அவருடைய தம்பி சதீஷ், தந்தை குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து அய்யாத்துரை, கல்யாணியை அரிவாளால் வெட்டியும், உருட்டுக்கட்டையாலும் தாக்கினர். பின்னர் அவர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோ, மோட்டார் சைக்கிள் மற்றும் பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதில் படுகாயம் அடைந்த கல்யாணி, அய்யாத்துரையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கல்யாணி கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், சதீஷ், குமார் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்