தஞ்சையில் 4 கடைகளில் பணம், பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தஞ்சையில் 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சை கீழவாசல், போலீஸ் நிலையம் சாலையில் ஒரு ஜெராக்ஸ் கடை உள்ளது. இந்த கடையில் செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது, புகைப்படங்கள் எடுத்து ஆதார் எண் பதிவு செய்வது மற்றும் நகல் எடுத்துக்கொடுப்பது உள்ளிட்ட வேலைகள் செய்துவருகின்றனர். இந்த கடையின் உரிமையாளர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலை கடையை திறக்க வந்த அவர், பூட்டு உடைக்கப்பட்டு கடையின் இரும்பு ஹட்டர் கதவு பாதி திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த மேஜை டிராயர் திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள சிறிய கேமரா, ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போன் ரீசார்ஜ் கார்டுகளை காணவில்லை. மர்ம நபர்கள் கடையின் உள்அறையில் வைத்திருந்த மேஜை சாவியை எடுத்து கேமரா, பணம் மற்றும் செல்போன் ரீசார்ஜ் கார்டுகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
மேலும் அருகில் இருந்த ஒரு மளிகை கடை, அதற்கு அடுத்துள்ள மற்றொரு மளிகை கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கடைகள் திறந்த நிலையில் இருந்தன. இதனால் காலையில் இந்த 2 மளிகை கடைகளையும் திறக்க வந்த உரிமையாளர்கள் பூட்டு உடைக்கப்பட்டு கடைகள் திறந்திருப்பதையும் அதில் இருந்த மளிகை பொருட்கள் வெளியே சிதறிக்கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஜெராக்ஸ் கடையின் அருகில் இருந்த மளிகை கடையில் ரூ.10 ஆயிரம் உள்பட 2 மளிகை கடைகளிலும் பணம், பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தனர்.
இதேபோல, தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் இரும்பு கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் மேற்கூரையை பிரித்து உள்ள நுழைந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த மடிக்கணினி, விலை உயர்ந்த 2 செல்போன்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டனர்.
இது குறித்து கடையின் உரிமையாளர்கள் தஞ்சை கிழக்கு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளின் பூட்டை உடைத்தும், மேற்கூரையை பிரித்தும் பணம், பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் திருட்டு நடந்த கடைகளில் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.தஞ்சையில் 4 கடைகளில் அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டு சம்பவங்கள் அந்தப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.