தஞ்சையில் தமிழக இயற்கை உழவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாரம்பரிய விதைகளை பாதுகாக்க வலியுறுத்தி தஞ்சையில் தமிழக இயற்கை உழவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2017-08-09 21:55 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயிலடியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக இயற்கை உழவர் இயக்கம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழக இயற்கை உழவர் இயக்க நிர்வாகி துரை.தியாகராஜன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மரபணு மாற்று தொழில்நுட்பத்தை மருத்துவ குணம் கொண்ட கடுகு மற்றும் உண்ணும் பல உணவு பொருட்களுக்கான விதைகளில் புகுத்த மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது இந்திய வேளாண்மையை அழித்துவிடும். நமது உணவு கலாச்சாரம் மற்றும் ஆரோக்கியத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பாராளுமன்ற வேளாண்மை நிலைக்குழுவின் தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா கமிட்டியினர் சமர்ப்பித்த அறிக்கையில் உணவு உத்தரவாதத்திற்கான தீர்வு மரபணு மாற்று பயிர்களில் இல்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

எனவே மரபணு மாற்று தொழில்நுட்பத்தை மத்தியஅரசு கைவிட வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், கடுகு போன்றவற்றை தமிழகத்தில் அனுமதிக்காமல் தமிழகஅரசு தடுத்த நிறுத்த வேண்டும். பன்னாட்டு விதை கம்பெனிகள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். நமது பாரம்பரிய விதைகளை பாதுகாக்க வேண்டும். காவிரி பிரச்சினையை தீர்க்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

காவிரிடெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம் போன்ற திட்டங்களை முழுமையாக கைவிட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். நாகை மாவட்டத்தில் சில கிராமங்களை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவிக்கப்பட்டதை திரும்ப பெற வேண்டும். உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியே வர வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணை செயலாளர் ரவி, தமிழக இயற்கை உழவர் இயக்கத்தை சேர்ந்த பனசை அரங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்