குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் வராததை கண்டித்து மாணவ, மாணவிகள் சாலைமறியல்

தேன்கனிக்கோட்டையில் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் வராததை கண்டித்து மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-08-09 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகே உள்ளது எருமுத்தனப்பள்ளி கிராமம். இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் அஞ்செட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தினமும் இந்த மாணவ, மாணவிகள் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால் பள்ளிக்கு செல்வதற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் வந்து செல்வதில்லை என மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் போதிய பஸ் வசதி இல்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாணவ, மாணவிகளின் பெற்றோர் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

ஆனால் இதுவரையும் பஸ்கள் உரிய நேரத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அஞ்செட்டி பஸ் நிறுத்தம் அருகே உரிகம் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார் மணிமொழி, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 15 நாட்களுக்குள் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்