தொழிலதிபர் உள்பட 2 பேர் வீடுகளில் பூட்டை உடைத்து 160 பவுன் நகை-ரூ.3 லட்சம் திருட்டு

கரூரில் தொழிலதிபர் உள்பட 2 பேர் வீடுகளில் பூட்டை உடைத்து 160 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-08-09 23:15 GMT
கரூர்,

கரூர் செங்குந்தபுரம் 9-வது குறுக்குத்தெரு விவேகானந்தர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சிவசாமி(வயது 46). இவர் வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். சிவசாமியின் மனைவி ஆனந்தி. இவர்களது மகள் சாந்தினி. இவர் ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.படித்து வருகிறார். சிவசாமியின் மனைவி ஆனந்தி வெங்கமேட்டில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த சில நாட்களாக வசித்து வருகிறார். மகள் பள்ளி முடிந்ததும் விவேகானந்தர் நகரில் உள்ள வீட்டிற்கு வருவது உண்டு. பின்னர் தனது தந்தைக்கு போனில் தகவல் தெரிவித்து வரவழைப்பார். அதன்பின் வெங்கமேட்டில் உள்ள மாமியார் வீட்டில் சிவசாமி குடும்பத்தினருடன் தங்குவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சாந்தினி வழக்கம் போல விவேகானந்தர் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் இரும்பு கதவு பூட்டு இல்லாமல் திறந்து இருந்தது. மேலும் அதனை கடந்து அடுத்து இருந்த வீட்டின் மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது.

இதுகுறித்து சாந்தினி உடனடியாக தனது தந்தை சிவசாமிக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் அவர் விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டார். வீட்டின் உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 80 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2½ லட்சம் இல்லையாம். இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிவசாமி புகார் அளித்தார். உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு திருட்டு நடந்த வீட்டிற்கு போலீசார் சென்றனர்.

வீட்டில் கதவு மற்றும் பீரோ இருந்த அறை உள்பட அனைத்து அறைகளையும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சந்திரசேகர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சிவசாமியின் மனைவி ஆனந்தி கண்ணீர் விட்டு அழுதபடியே இருந்தார். போலீசாரிடம் சிவசாமி கூறுகையில், “வீட்டில் பீரோவில் லாக்கரில் இல்லாமல் சாதாரண அடுக்கில் 80 பவுன் தங்க நகைகள், ரூ.2½ லட்சம் வைத்திருந்தோம். அதன் மேலே துணியை போட்டு மூடியிருந்தோம். கடந்த 15 ஆண்டுகளாக சேமித்த தங்க நகைகள். உறவினர் ஒருவரது திருமணத்திற்கு சென்றபின் அதனை ஓரிரு நாட்களில் வங்கி லாக்கரில் வைக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதற்குள் யாரோ திருடி சென்றுவிட்டனர். வீட்டில் கடந்த 5 நாட்களாக இரவில் தங்கவில்லை. பகலிலும் வீட்டில் இல்லை. மாலையில் பள்ளி முடிந்து மகள் வந்ததும் நான் கடையில் இருந்து வந்து மகளை அழைத்துக்கொண்டு எனது மாமியார் வீட்டிற்கு சென்றுவிடுவேன்” என்றார்.

இதைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டிவிட்டு தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. நகைகள் மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர் டவுன் பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தாய், மகன் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து நகை மற்றும் பணம் மீட்கப்பட்ட விவரத்தை நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இந்த நிலையில் கரூர் டவுன் பகுதியில் ஜவுளி தொழில் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் தங்கியிருக்கும் பகுதியில் நகை, பணம் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே உள்ள ரங்கசாமிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 40). நிதி நிறுவன அதிபர். இவருடைய மனைவி சித்ராதேவி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். அவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் செல்வராஜ் நேற்று காலை தொழில் சம்பந்தமாக வெளியே சென்றார். பின்னர் குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். இதையடுத்து குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சித்ராதேவி வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.


இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ராதேவி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த 80 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மற்றும் எல்.இ.டி. டிவி, அயன்பாக்ஸ் ஆகியவை திருடுபோய் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சித்ராதேவி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கரூரில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்