கள்ளத்தொடர்பு வைத்துள்ள போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரிடம் இருந்து எனது மனைவியை மீட்டு தாருங்கள்

‘கள்ளத்தொடர்பு வைத்து உள்ள போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரிடம் இருந்து எனது மனைவியை மீட்டு தாருங்கள்‘ என திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் கட்டிட தொழிலாளி மனு கொடுத்து உள்ளார்.

Update: 2017-08-09 22:15 GMT

திருச்சி,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(வயது47) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வி(37). இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் கல்லூரி மற்றும் பள்ளியில் படித்து வருகிறார்கள். செல்வி பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல படையில் போலீசாருக்கு உதவியாக பணியாற்றி வருகிறார்.

ஜெகதீசன் நேற்று திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு வந்து டி.ஐ.ஜி. பவானீஸ்வரியை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

ஊர்க்காவல் படையில் வேலை பார்க்கும் எனது மனைவிக்கும் அரும்பாவூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலுவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. நான் கட்டிட வேலைக்கு சென்ற பின்னர் சப்– இன்ஸ்பெக்டர் பாலு எனது வீட்டுக்கு வந்து செல்வதாக அக்கம்பக்கத்தினர் கூறினார்கள். இதனை தொடர்ந்து இருவரையும் நான் கண்டித்தேன். அரும்பாவூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் ரஞ்சனியிடமும், பாலு மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் செய்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 1–ந்தேதி பாலு, எனது வீட்டில் இருப்பதை அறிந்து வேலைக்கு சென்றிருந்த நான் திடீர் என வந்தேன். அப்போது பாலு என்னிடம் இருந்து தப்பிப்பதற்காக அவரது தொப்பி, எப்.ஐ.ஆர். புத்தகம், குடிபோதையில் இருப்பதை கண்டு பிடிக்கும் கருவி, டார்ச் லைட் ஆகியவற்றை எனது வீட்டிலேயே விட்டு விட்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார். நான் அதனை எடுத்து வைத்துக்கொண்டேன். அதனை கேட்டு சப்–இன்ஸ்பெக்டர் பாலு என்னிடம் போனில் மிரட்டி வருகிறார். ஆனால் நான் அவரது கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்து வருகிறேன்.

எனது மனைவியுடன் தவறான உறவு வைத்து உள்ள சப்–இன்ஸ்பெக்டர் பாலு மீது நடவடிக்கை எடுத்து, அவரது பிடியில் சிக்கி உள்ள எனது மனைவியை மீட்டு தரவேண்டும். பாலுவால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் எனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு டி.ஐ.ஜி. பவானீஸ்வரி உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்