முதுமலை வனப்பகுதியில் தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பின
முதுமலை வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பின. வனப்பகுதியில் பசுமை திரும்பியதால் வனவிலங்குகள் மீண்டும் வரத்தொடங்கி உள்ளன.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமானது 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இங்கு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காப்பகத்தில் கடந்த கோடை காலத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால் வனவிலங்குகள் குடிநீர் மற்றும் பசுந்தீவனங்கள் இன்றி கடுமையாக பாதிக்கபட்டன.
குறிப்பாக குடிநீர் தேடி வனவிலங்குகள் வேறு வனப்பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றன. மான் போன்ற சில வனவிலங்குகள் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலேயே இருந்தது. இதனால் அவை வறட்சி காரணமாக இறக்கும் அவலமும் ஏற்பட்டது. மேலும், 5–க்கும் மேற்பட்ட காட்டு யானைகளும் இறந்தன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சியால் வறண்டு காணப்பட்ட நீர் நிலைகள் அனைத்தும் நீர் நிரம்பி உள்ளது. குறிப்பாக முதுமலையில் ஓடும் முக்கிய ஆறான மாயார் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக வனத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், சிறுகுளங்கள் உள்ளிட்ட 150 நீர் நிலைகளும் முழுவதுமாக தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. முக்கிய நீர் நிலைகளான ஒம்பெட்ட, கேமட் போன்றவை நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. இதனால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது.
மேலும் வனப்பகுதியும் பசுமையாக காட்சி அளிப்பதால் வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனங்களும் அதிகரித்து உள்ளன. இதனால் வறட்சி காலத்தில் வேறு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்ற வனவிலங்குகள் மீண்டும் முதுமலை வனப்பகுதிக்கு வரத்தொடங்கி உள்ளன. இதனால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.