விபத்தில் காயம் அடைந்தவரை மீட்க 108 ஆம்புலன்ஸ் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

விபத்தில் காயம் அடைந்தவரை மீட்க 108 ஆம்புலன்ஸ் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2017-08-09 22:30 GMT

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே காமராஜ் நகரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வட மாநிலத்தை சேர்ந்த அஷ்வத் (30) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கொளப்பலூரில் இருந்து கோபிக்கு மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். கோபி அருகே சென்றபோது எதிரே வந்த வேன் ஒன்று அஷ்வத் ஓட்டிச்சென்ற மொபட்டின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் விபத்து குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் வேன் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று தெரிகிறது. பின்னர் அவர்கள் வேறு ஒரு வாகனம் மூலம் அஷ்வத்தை கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் விபத்து நடந்த இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வராததை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று மாலை 5 மணி அளவில் கோபி–கொளப்பலூர் ரோட்டுக்கு வந்தனர். பின்னர் திடீரென நடுரோட்டில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வன் மற்றும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘கோபி பகுதியில் விபத்துகள் நடந்தால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுப்போம். ஆனால் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு உரிய நேரத்தில் விரைந்து வருவதில்லை. இதனால் ஒருசில உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்’ என்றனர்.

அதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மாலை 5.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் கோபி–கொளப்பலூர் ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்