பெருந்துறையில் அரசு பள்ளி அருகில் குவியல் குவியலாக கிடந்த காலாவதியான குளிர்பான பாட்டில்கள்
பெருந்துறையில் அரசு பள்ளி அருகில் குவியல் குவியலாக காலாவதியான குளிர்பான பாட்டில்கள் வீசப்பட்டு கிடந்தன. அங்கு கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் பிரிவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று காலை 8.30 மணி அளவில் மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளிக்கூடம் அருகில் ரோட்டோரத்தில் குவியல் குவியலாக குளிர்பான பாட்டில்கள் கிடந்தன. பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவர்கள் இதனைப்பார்த்தனர்.
அந்த வழியாக வந்தவர்களும் அங்கு கூடினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சில மாணவர்கள் அதனை எடுத்து குடிக்க முயன்றனர். அப்போது அங்கு கூடிநின்றவர்கள் இது காலாவதியான குளிர்பான பாட்டில்கள் போல் தெரிகிறது என்று கூறி யாரையும் அதனை குடிக்கவிடாமல் தடுத்தனர்.
இதுபற்றி பெருந்துறை பேரூராட்சி அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பேரூராட்சி அதிகாரி மற்றும் பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். அந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குளிர்பான பாட்டில்கள் கொட்டப்பட்டு கிடந்தன. பேரூராட்சி அதிகாரி அதனை எடுத்து பார்த்தார். அந்த பாட்டில்களில் காலாவதியான தேதி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த பாட்டில்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களை சேர்ந்த குளிர்பானங்கள் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து பேரூராட்சி பணியாளர்கள் குப்பை அள்ளும் வாகனம் கொண்டு வந்து அந்த பாட்டில்களை எடுத்துச் சென்று ஓரிடத்தில் வைத்து அழித்தனர்.
கடைகளில் விற்காத பாட்டில்களை திரும்பபெற்ற மொத்தவிற்பனையாளர்கள் யாராவது காலாவதியான குளிர்பான பாட்டில்களை பள்ளிக்கூடத்துக்கு அருகில் வீசிச்சென்று இருக்கலாம். அல்லது கடைக்காரர்கள் யாராவது போட்டுச்சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அதிகாரி ராஜேந்திரன் கூறும்போது, ‘இந்த பாட்டில்கள் அனைத்திலும் காலாவதி தேதி 2016–ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே காலாவதியாகி ஒரு ஆண்டு ஆன குளிர்பான பாட்டில்களை இங்கு இரவு நேரத்தில் வந்து வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
காலாவதியான குளிர்பான பாட்டில்களை இவ்வாறு பள்ளிக்கு அருகிலோ, குடியிருப்பு பகுதியிலோ கொட்டுவது சட்டவிரோதமான செயலாகும். தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு கொட்டும் போது யாராவது இவற்றை எடுத்து குடித்தால் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படும். இந்த பாட்டில்களை வீசிச்சென்றது யார்? என்று கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றார்.