காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு ஆஸ்பத்திரியை அணுக வேண்டும்

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியை அணுக வேண்டும் என்று மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2017-08-09 22:15 GMT

மானாமதுரை,

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்புவனம் அருகே உள்ள வன்னிக்கோட்டை கிராமத்தில் 50–க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. பூவந்தி வட்டார மருத்துவ அலுவலர் சேதுராமு, முன்னாள் கவுன்சிலர் சங்கர் உள்ளிட்டோர் வன்னிக்கோட்டை கிராமத்தில் ஆய்வு செய்தனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரிய சிகிச்சை பெற மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். மேலும் காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் கிராமமக்கள், பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

பின்னர் மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. கூறியதாவது:– மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் டெங்கு மற்றும் மர்மக்காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அந்தந்த அரசு ஆஸ்பத்திரிகளை உடனடியாக அணுக வேண்டும். மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் தொடர்பாக சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் உடனடியாக எம்.எல்.ஏ. அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் தங்களது வீட்டை சுற்றி உள்ள அனைத்து பகுதியிலும் பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுநீர் தேங்காமல் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மேலும் அந்தந்த கிராமங்களில் நடத்தப்படும் டெங்கு விழிப்புணர்வு முகாமில் வழங்கப்படும் நிலவேம்பு கசாயத்தை குடித்து காய்ச்சல் வராமல் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்