குறைவாக நிலம் உள்ள பள்ளிகளும் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கலாம்

குறைவாக நிலம் உள்ள பள்ளிகளும் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று புதிதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2017-08-09 22:45 GMT
சென்னை,

தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தின் கீழ் 3,291 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் ஒரு பள்ளிக்கூடம் ஊராட்சி பகுதிகளில் இருந்தால் 3 ஏக்கர் நிலமும், பேரூராட்சி பகுதிகளில் இருந்தால் ஒரு ஏக்கர் நிலமும், நகராட்சி பகுதியாக இருந்தால் 10 கிரவுண்ட் நிலமும், மாவட்ட தலைநகராக இருந்தால் 8 கிரவுண்டு நிலமும், மாநகராட்சி பகுதியாக இருந்தால் 6 கிரவுண்ட் நிலமும் இருக்கவேண்டும். ஆனால் அரசு நிர்ணயித்த விதிப்படி 746 பள்ளிகளுக்கு நிலம் இல்லை.

நிலம் குறைவாக உள்ள 746 பள்ளிகளில், சில பள்ளிகள் நிலம் வாங்கின. அந்த பள்ளிகள் போக 681 பள்ளிகள் நிலம் போதாத நிலையில் உள்ளது. மாணவர்கள் நலன் கருதி அந்த 681 பள்ளிகளுக்கும் தற்போது இருக்கும் நிலமே போதும் என்று புதிதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2,500 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு நகர்ப்புற மற்றும் ஊரமைப்பு திட்டத்தின் அனுமதியை பெறவேண்டும் என்று நிபந்தனை விதித்து, அந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

நிலம்போதும் என்றுள்ள 681 பள்ளிகளும் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் தடை இல்லா சான்று தீ அணைப்புத் துறையிடம் பெற்றிருக்கவேண்டும். கட்டிட உறுதிச்சான்று வைத்திருக்க வேண்டும். இப்படி அனைத்து சான்றுகளும் வைத்து இருந்தால் அங்கீகாரம் கொடுக்கப்படும். புதிதாக தொடங்கும் பள்ளிகளுக்கு அரசு விதிப்படி நிலம் மற்றும் அனைத்தும் தேவை.

இந்த தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்