“மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்” இரோம் ‌ஷர்மிளா பேட்டி

மனித உரிமை மீறல்களுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்று மனித உரிமை ஆர்வலர் இரோம் ‌ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

Update: 2017-08-10 01:45 GMT

மதுரை,

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு எதிரான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, இடப்பக்க ஊடக மையத்தின் சார்பில் மதுரையில் கருத்தரங்கு நடந்தது. இதில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் இரோம் ‌ஷர்மிளா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவிலும், தமிழகத்திலும் உறுதியான அரசியல் தலைமை இல்லாத சூழலில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், திவ்யபாரதியை போன்ற ஆவணப்பட இயக்குனர்கள் தான் உண்மையை, சத்தியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். இவர்கள் தான் பலம் மிக்க மனித உரிமை காவலர்களாக திகழ்கிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் திவ்யபாரதிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைத்ததால் இங்கு வந்துள்ளேன். மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தவறு என்று சட்டம் சொல்கிறது. அந்த சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் அமல்படுத்தவில்லை. ஆனால் ‘கக்கூஸ்‘ என்ற ஆவணப்படம் மூலம் மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தவறு என்று திவ்யபாரதி எடுத்துக்காட்டியுள்ளார்.

ஆனால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அரசு அதை செய்வதை விட்டுவிட்டு, திவ்யபாரதி மீது வழக்குபதிவதும், மிரட்டல் விடுப்பதும் தவறானது. அவருக்கு ஆதரவாக எங்கு அழைத்தாலும் வருவேன். மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணித்தடைச்சட்டம் முறையாக பின்பற்றப்பட்டால் இந்தியாவில் சாதியின் பெயரால் காலம் காலமாக அடிமைகளாக இருக்கும் சமூகங்கள் உண்மையான விடுதலை பெறும். மணிப்பூரில் சிறப்பு ஆயுதப்படை சட்டத்துக்கு எதிராக போராடினேன். ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகள் போராட்டம் நடத்தினேன். அங்கிருந்து தமிழகம் வந்தபோது அனைத்தும் முடிந்து விட்டது என்று நினைத்தேன். ஆனால் இங்கு திவ்யபாரதிக்கு ஏற்பட்டுள்ள நிலையை பார்க்கும்போது அடக்கு முறை இன்னும் முடிந்துவிடவில்லை என்று புரிந்து கொண்டேன். நாடு முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் அடக்குமுறை இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

திருமணம் என்பது தனிப்பட்ட 2 பேரின் விருப்பத்துடன் செய்து கொள்வது. அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டேன். மனித உரிமை மீறல்களுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். என்னுடைய திருமணம் வருகிற 16–ந்தேதி கொடைக்கானலில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயராமன், பேராசிரியர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்