பாம்பனில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கல சுறாவின் வயிற்றில் பிளாஸ்டிக் கரண்டி

பாம்பனில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறாவின் வயிற்றில் பிளாஸ்டிக் கரண்டி இருந்தது. இதனால் திமிங்கல சுறா இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கூறினர். எனவே பிளாஸ்டிக் பொருட்களை கடலில் வீச வேண்டாம் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2017-08-09 23:00 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே பாம்பன் கடற்கரையில் நேற்று முன்தினம் சுமார் 18 அடி நீளமும் 4டன் எடை கொண்ட ஒரு பெரிய திமிங்கல சுறா இறந்து கரை ஒதுங்கியது. அதை வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களை கொண்டு உடற்கூறு பரிசோதனை செய்தனர். அப்போது திமிங்கல சுறா வயிற்றில் பிளாஸ்டிக் கரண்டி இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு ஜே.சி.பி. எந்திரம் மூலம் கடற்கரையில் பெரிய பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.

இதுபற்றி மண்டபம் வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:– பாம்பனில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கல சுறா ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூக்கி கடற்கரையில் புதைக்கும் முன்பு கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் திமிங்கல சுறாவின் வயிற்றில் பிளாஸ்டிக் கரண்டி இருந்தது தெரியவந்தது. இதுபோன்று பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கியதால் கூட திமிங்கல சுறா இறக்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு செல்லும் உணவு பொருட்களை சாப்பிட்ட பின்பு பிளாஸ்டிக் பைகளை கடலில் வீசி விடுகின்றனர். அதுபோல பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றையும் சாப்பிட்டு விட்டு கடலில் வீசிவிடுகின்றனர். இதுதவிர ராமேசுவரம், தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகளும் பலர் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை கடற்கரை மற்றும் கடலில் வீசுவதை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இதுபோன்று செய்வதால் கடலில் வாழும் திமிங்கலம், சுறா உள்பட பெரிய வகை மீன்கள் அதை சாப்பிடும் போது உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. மேலும் பிளாஸ்டிக் ஸ்டிராக்கள், பைகளையும் கடலில் வீசுவதால் அவை, டால்பின், கடல் பசு, கடல் ஆமை உள்ளிட்ட கடல் வாழ் உயரினிங்களின் மூக்கு பகுதியில் சிக்கி இறந்து விடுகின்றன.

கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் கடல் வாழ் உயிரினங்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடும் மீன்கள், மீனவர்களின் வலை பிடிபட்டு, சந்தைக்கு வரும் போது, அதை வாங்கி சாப்பிடும் நமக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்றால் கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் உள்பட சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் கடலில், கடற்கரையோரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை வீசக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்