ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அமைச்சர் மணிகண்டனின் கோரிக்கையை ஏற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுஉள்ளார்.

Update: 2017-08-09 22:45 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 429 ஊராட்சிகளுடன் 11 யூனியன்களை கொண்ட பெரிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் பெரும்பகுதி கிராமங்கள் கடற்கரை பகுதியை சார்ந்துள்ளபடியால் இங்கு கிடைக்கிற நிலத்தடி நீர் அதிக உப்புத்தன்மை உடையதாக உள்ளது. இதனால் இந்த மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கு திருச்சி காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீரையே பிரதானமாக சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் ஒருசில பகுதிகளில் கிடைத்த உள்ளூர் குடிநீர் ஆதாரங்களும் தற்போதைய வறட்சியின் காரணமாக வறண்டு போய்விட்டன.

எனவே, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக அமைச்சர் மணிகண்டனின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள நகர் மற்றும் ஊரக பகுதிகளின் குடிநீர் தேவைக்காக ரூ.18.47 கோடி மதிப்பில் 1,340 பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்வாக அனுமதி வழங்கி பணிகளை செயல்படுத்தி உள்ளது. இருப்பினும் தொடர் வறட்சியின் காரணமாக மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய இயலவில்லை.

மேலும் காவிரி ஆற்றுப்படுகையிலும் கிடைத்த நிலத்தடி நீர்மட்டம் எதிர்பாராத அளவிற்கு குறைந்துவிட்டபடியால், ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த 48 மில்லியன் லிட்டர் குடிநீர் படிப்படியாக குறைந்து இன்றைய நாளில் மிகக்குறைவாக 8 மில்லியன் லிட்டர் மட்டுமே கிடைக்கின்றன.

இதைக்கொண்டு எந்த கிராமத்திற்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரித்து வரும் சூழலில் பொதுக்களின் குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 3,000 கனஅடி வீதம் குடிநீர் திறந்துவிடப்பட்டு திருச்சி – குழித்தளை அருகே வந்து சேர்ந்துள்ளது. இதே கனஅடி அளவில் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் கிடைக்கும் முத்தரசநல்லூர் என்ற இடத்திற்கு வந்துசேர வாய்ப்பு இருக்காது என்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், இதுதொடர்பான விவரத்தை அமைச்சர் மணிகண்டனின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

மாவட்ட மக்களின் அவசர அவசியம் கருதி தண்ணீர் தேவையினை கருத்தில் கொண்டு அமைச்சர் மணிகண்டன் உடனடியாக தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை வைத்தார். அமைச்சரின் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடிக்கு பதிலாக 7,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள குடிநீர் கிணறுகளில் தண்ணீர் பெருகி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேவையான குடிநீர் முழுமையாக கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்–அமைச்சர் மற்றும் முயற்சி செய்து அனுமதி பெற்று தந்த அமைச்சர் மணிகண்டன் ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்