பணம் கேட்டு மிரட்டல் போலி நீதிபதி உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
விமான நிலையத்தில் கார் டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி சிறப்பு நீதிபதி உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஆலந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.;
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ‘பிரீபெய்டு கால் டாக்சி’ உள்ளது. இங்கு கார் டிரைவராக உள்ள அமிர்தலிங்கம் என்பவர் கடந்த 2010–ம் ஆண்டு விமான நிலைய போலீசில் ஒரு புகார் செய்தார்.
அதில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த செந்தமிழ்கிழார் (வயது 67), பழவந்தாங்கலை சேர்ந்த முகமது உசேன் (64) ஆகியோர் ‘பிரீபெய்டு கால் டாக்சி’ குறித்து நோட்டீஸ்களை வழங்கி, முறைகேடுகள் நடப்பதாகவும், ரூ.10 ஆயிரம் தரவேண்டும் என மிரட்டுவதாகவும் கூறி இருந்தார்.
இது பற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தமிழ்கிழார், முகமதுஉசேன் ஆகியோரை கைது செய்தனர். அப்போது செந்தமிழ்கிழார், தன்னை இந்தியாவின் சிறப்பு நீதிபதி என்றும், முகமது உசேன் மக்கள் சிறப்பு ஆய்வாளர் என்றும் கூறி பாதிக்கப்பட்டோர் கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன், விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கினார்.
அதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது மனிதனின் கடமையாகும். அதே சமயத்தில் பாதிக்கப்பட்டோருக்கு செய்யும் உதவியானது சட்டப்படியானதாக இருக்க வேண்டும்.
மாறாக பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வதாக கூறி அதிகாரத்தை தங்களது கையில் எடுத்துக்கொண்டு சட்டம் வழங்காத அடைமொழிகளை தங்களுக்கு தாங்களே அளித்துக்கொண்டு செயல்படுவதும், அதன் மூலம் மற்றவர்களை மிரட்டுவதும், அச்சுறுத்தி அதன் மூலம் பலன் அடைவதும் சட்டத்துக்கு புறம்பான தண்டிக்கத்தக்க செயலாகும்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் கழகம் என்ற பெயரில் அமைப்பு வைத்து இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறார்களா? என ஆய்வு செய்தபோது அவர்களது நோக்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக கூறி இந்தியாவின் சிறப்பு நீதிபதி, மக்கள் சிறப்பு ஆய்வாளர் என்று அடைமொழிகளை வழங்கிக்கொண்டு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு அரசு அதிகாரிகளையும், நீதிபதிகளையும் மிரட்டி பலன் பெற முயற்சிப்பதாக உள்ளது.
எனவே செந்தமிழ்கிழார், முகமது உசேன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 2 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் வழங்கி உத்தரவிட்டார்.