கருப்பு தினமாக அனுசரிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் ஆதிவாசிகள் மனு
உலக ஆதிவாசிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்ததுடன், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிவாசிகள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
உலக ஆதிவாசிகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த தினத்தை ஆதிவாசிகள் கருப்பு தினமாக அனுசரித்ததுடன், தங்களது கோரிக்கைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள 50–க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வனப்பொருட்களை சேகரித்து ஆதிவாசி மக்களே விற்பனை செய்வதற்கு அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
2006–ம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின்படி, வனப்பகுதியில் ஆதிவாசிகள் பயிர் சாகுபடி செய்யும் நிலங்களை அவர்களுக்கே அளந்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நிலங்களை அளந்து கொடுக்காமல் 3 தலைமுறைகளுக்குரிய ஆதாரங்கள் வேண்டும் என வனத்துறையினர் மிரட்டுவதை நிறுத்த வேண்டும்.
மேலும், ஆதிவாசிகளுக்கு சமூக உரிமைகள் வழங்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆதிவாசி மக்கள் மத்தியில் மனுநீதி நாள் முகாம் நடத்தி அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிவாசிகளிடம் இருக்கும் நிலங்களை அபகரிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.