திருச்செந்தூர் கடலில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சாவு

திருச்செந்தூர் கடலில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

Update: 2017-08-09 21:30 GMT

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் கடலில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அய்யன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் தங்க இசக்கி (வயது 16). இவர் நெல்லை சங்கர்நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று மதியம் தன்னுடன் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் சிலருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். பின்னர் அனைவரும் கடலில் குளித்தனர். அப்போது பெரிய அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட அவர் கடலில் மூழ்கினார். சிறிதுநேரத்தில் அவரை காணாததால், அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அனைவரும் கடலில் தேடினர்.

உடல் கரை ஒதுங்கியது

நீண்ட நேரமாகியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், நண்பர்கள் திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசாரும் விரைந்து சென்று கடலில் இறங்கி, அவரை தேடினர். இதற்கிடையே பைரவர் கோவில் அருகில், இறந்த நிலையில் அவருடைய உடல் கரை ஒதுங்கியது.

உடனே போலீசார் விரைந்து சென்று, அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்