தூத்துக்குடியில், வீடு புகுந்து ஓய்வு பெற்ற வீட்டுவசதி வாரிய ஊழியரிடம் 10½ பவுன் நகை பறிப்பு

தூத்துக்குடியில் வீடு புகுந்து கத்திமுனையில் ஓய்வு பெற்ற வீட்டு வசதி வாரிய ஊழியரிடம் 10½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-08-09 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வீடு புகுந்து கத்திமுனையில் ஓய்வு பெற்ற வீட்டு வசதி வாரிய ஊழியரிடம் 10½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற ஊழியர்

தூத்துக்குடி முனியசாமிபுரம் 2–வது தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 62). இவர் திருச்சி வீட்டு வசதி வாரியத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவருடைய மகன் சென்னையிலும், மகள் கோவையிலும் உள்ளனர்.

நேற்று முன்தினம் அவர் வீட்டில் தனியாக இருந்தாராம். மதியம் 2 மர்ம ஆசாமிகள் அவர் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீடு காலியாக உள்ளதா? என்று கேட்டார்களாம். அப்போது வீடு எதுவும் காலியாக இல்லை என்று அவர் கூறி அனுப்பி விட்டாராம்.

கத்தியை காட்டி மிரட்டல்

அதே மர்ம ஆசாமிகள் இரவில் மீண்டும் வந்து உள்ளனர். அவர்களை பார்த்த அவர், வீட்டு கதவை திறந்து பேசினாராம். அப்போது அவர்கள் 2 பேரும் திடீரென வீட்டுக்குள் நுழைந்தார்களாம். ஒருவர் கையில் கொண்டு வந்திருந்த துணியால் நடராஜனின் கழுத்தை இறுக்கி பிடித்து உள்ளார். இதனால் அவர் சத்தம் போட முடியாமல் திணறினார். மற்றொரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.

10½ பவுன் நகை பறிப்பு

பின்னர், அவர் அணிந்து இருந்த 6 பவுன் தங்க சங்கிலி, 3 பவுன் மோதிரம், 1½ பவுன் கைச்சங்கிலி ஆகிய 10½ பவுன் தங்க நகைகளையும் பறித்துக் கொண்டனர். அதன்பிறகு அவருடைய நெற்றியில் கத்தியால் லேசாக கீறிவிட்டு மர்ம ஆசாமிகள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்