உயர்வுக்கு உதவும் சுதந்திரம்!
தங்கள் குழந்தையின் திறமையை எப்படி மேம்படுத்தலாம் என்ற கவலை அனைவருக்குமே இருக்கும். அதற்கான வழிமுறைகள் பல இருக்கின்றன.
சுதந்திர காற்றை சுவாசிக்கும்போது நமக்குள் புது சக்தி பிறக்கும். குழந்தை வளர்ப்பிலும் சுதந்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நமக்கு கிடைக்காததெல்லாம் நம் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் இன்று அதிகம். ஆனாலும் அதீத அக்கறையால் குழந்தைகளை ரோபோக்களைப்போல நடத்தி, எல்லாவற்றையும் வற்புறுத்தி திணிப்பதுமாக வளர்க்கிறார்கள். குழந்தை வளர்ப்பில் செய்யும் தவறுகளையும், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சுதந்திரத்தை பற்றியும் சிறிது பேசுவோம்...
* மனம் சுதந்திரமாக இருக்கும்போதுதான் சிறப்பாக செயல்படும். குழந்தையை தொந்தரவு செய்யாமல் எந்த செயலையும் சுதந்திரமாக செய்யவிடுங்கள். ‘அழகாக செய்தாய், எங்கே மீண்டும் செய்து காட்டு’ என்று பாராட்டுங்கள். இப்போது அதைவிட அழகாக மீண்டும் செய்வார்கள். முன்பு செய்த தவறுகளைக்கூட அவர்களே திருத்திக் கொள்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருக்கும்போதே அதை அப்படிச் செய்யக்கூடாது என்று தடுத்தால், அவர்களுக்கு அதை செய்வதில் நாட்டமில்லாமல் போவதுடன், மனதை வேறுபக்கம் திருப்பிக் கொள்வார்கள். மீண்டும் நாம் வற்புறுத்தினாலும் அதை செய்து காண்பிக்க மாட்டார்கள்.
* குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்கள் அனுபவத்தின் வழியாகவே நிறைய கற்றுக் கொள்வார்கள். தவறுகளே அந்த அனுபவப் பாடத்தை கற்றுத் தருகிறது. ஆனால் குழந்தையை கவனிக்கும் பெற்றோர், குழந்தைகள் செய்யும் தவறுகளை திருத்துவதாக எண்ணிக் கொண்டு கத்துவதையும், திட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது அவர்களின் மனதில் எதற்கெடுத்தாலும் திட்டுவார்கள் என்ற அசட்டுத்தனத்தை வளர்த்துவிடும். தன்னம்பிக்கையையும் குறைத்துவிடும்.
* மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது பெற்றோர் செய்யும் மற்றொரு மாபெரும் தவறாகும். இதுவும் தன்னம்பிக்கையை இழக்கச் செய்து பலவீனத்தை வளர்க்கும். குழந்தைகளை மற்றவர் முன்பு அவமானம் செய்யக் கூடாது. சின்னச்சின்ன விஷயங்களிலும் அவர்களை பாராட்டுங்கள். தவறு செய்தால்கூட, மென்மையாக சுட்டிக்காட்டுங்கள். மீண்டும் சரியாக செய்ய வாய்ப்பளியுங்கள்.
* எப்போதும் படி, படி என்று வற்புறுத்திக் கொண்டிருக்கக் கூடாது. போட்டி மனப்பான்மையுடன், இலக்கை நோக்கி எப்போதும் குழந்தைகளை உந்தித் தள்ளக்கூடாது. குழந்தைப் பருவத்து அனுபவங்களை, விளையாட்டுகளை, சுதந்திரத்தை அவர்களை அனுபவிக்கச் செய்யுங்கள். யதார்த்தமாக அவர்கள் செய்யும் செயல்களும், அனுபவிக்கும் அனுபவங்களுமே அவர்களை எதிர்காலச் சூழலை சரியாக எதிர்கொள்ள வழி வகுக்கும்.
* மணலில் விளையாடுவதால் உடல் அசுத்தமாகும் என்றும், தண்ணீரில் விளையாடுவதால் நோய்கள் பரவும் என்றும் தடுத்துவிடுவதும், படிப்பதால் மட்டுமே அவர்களின் அறிவு மேம்படும் என்று நினைப்பதும் பெரும் தவறாகும். குழந்தைகளுக்கு விளையாட போதிய இடத்தையும், அவகாசத்தையும் வழங்காததன் காரணமாக பல்வேறு அனுபவங்களை அவர்கள் தவற விடுகிறார்கள். புறச்சூழலுக்கு ஏற்ப தன்னிச்சையாகச் செயல்படும் நரம்பு மண்டல செயல்பாடுகளை இது தடுத்துவிடுகிறது.
* மண்ணிலும், தண்ணீரிலும் விளையாடுவதும், மற்றவர்களுடன் இணைந்தும், போட்டியிட்டும் விளையாடுவதும் ஆரோக்கியமான பலன்களை அதிகம் தரும். கோகோ, கபடி போன்ற விளையாட்டுகள் மூலம் சரியானது எது? தவறு எது? என்பதை குழந்தைகள் அறிந்துகொள்கின்றனர்.
அத்துடன் துணிகர முயற்சிகளை எடுக்கவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும், அணி சேர்க்கவும், மற்றவர் மீது பிரியமாக இருக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். பயிற்றுவிப்பதைவிட கலந்துரையாடல்களில்தான் சமூகப் பண்புகள் வளர்கின்றன. எனவே பேசவும், விளையாடவும், பகிர்ந்து உண்ணவும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
* ஒழுக்கம் மிகவும் அவசியமானதுதான். ஆனால் எதற்கெடுத்தாலும் அதைத் தொடாதே, இதைச் செய்யாதே, அப்படி இரு, ஒழுக்கமாய் நட என்று வற்புறுத்திக் கொண்டிருக்க வேண்டாம். மனிதனுக்கு கற்றல் என்பது அவன் கருவறையில் தொடங்கி மரணம் வரையில் நீடிக்கிறது. நாமும் இன்றும் பல விஷயங்களை புதிதாக அனுபவித்து அறிகிறோம். அதுபோலவே அவர்களும் தங்கள் அறிவுணர்ச்சியால் மெல்ல மெல்ல தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வார்கள்.
* தங்கள் குழந்தையின் திறமையை எப்படி மேம்படுத்தலாம் என்ற கவலை அனைவருக்குமே இருக்கும். அதற்கான வழிமுறைகள் பல இருக்கின்றன. பொதுவாக புத்தகப் படிப்பு மட்டுமே எல்லாவற்றையும் வளர்க்கும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். புத்தக படிப்பைத் தாண்டிய அனுபவங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
* குழந்தைகளின் படிக்கும் திறனை ஊக்குவிக்க கவலையின்றி படிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். மனப்பாடம் செய்ய வேண்டும், கட்டாயம் படித்தே ஆக வேண்டும் என்பது போன்ற நெருக்கடியில்லாமல் விளையாட்டும், செயலுமாக கற்றால் அவர்கள் விருப்பத்துடன் படிப்பார்கள். மனதில் ஏற்றிக் கொள்வார்கள்.
* குழந்தைகளுக்குத் தற்போது சேர்ந்து விளையாடவோ, பொழுதைக் கழிக்கவோ, சாவகாசமாகத் தங்கள் இயல்புக்கு ஏற்ப கற்பதற்கோ போதிய நேரமில்லை. ஆனால் குழந்தைகளைப் பொருத்தவரை அவகாசம் அவசியமானது. அதிகரித்துவரும் பாடச்சுமையும், பயிற்சிகளும் அவர்களது இளைப்பாறும் இடைவேளைகளை திருடிக் கொள்கின்றன. குழந்தைகளின் அடிப்படைத் தேவையான விளையாட்டை பெற்றோரும், பள்ளிகளும் பறிக்கக் கூடாது. விதவிதமான பயிற்சிகள் மட்டும் அவர்களை மேதைகளாக்கி விடாது. விளையாட்டைப் போல அவர்களின் திறன்களில் மாறுதலை ஏற்படுத்துவது எதுவுமில்லை. அதனால்தான் சமீப காலமாக செயல்வழி கற்றல் சிறந்தது என பேசப்பட்டு வருகிறது.
* மதிப்பெண்கள் பெறவும், உயர் பதவிக்கு செல்லும் நோக்கத்துடனும் குழந்தைகளை முடுக்கிவிடக் கூடாது. அப்படி எந்திரத்தனமாக நடத்தப்படும் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தங்கள் அடிப்படை திறனில் இருந்து எளிதில் விலகுவார்களே தவிர, அதிகமாக சாதிப்பதில்லை. அறிவின் உண்மையான ஆழத்தைத் தேடி படிப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் அதிகமாக சாதிப்பார்கள்.
* உடலியல் ரீதியில் ஒன்றைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைவுகூரும்போது புத்திக்கூர்மைத் திறன் அதிகமாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் அழுத்தமற்ற சூழலில் ஒரு விஷயத்தை ஆழமாக புரிந்து செய்யும்போது அது நல்ல முறையில் நினைவில் தங்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சுதந்திரமான சூழலில், ஆர்வத்துடன் கூடிய கற்றலே, குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உகந்தது. ‘பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்’ என்பதைப்போல, ‘பெற்ற பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுத்து அவர்களின் சாதனையில் பங்கெடுப்போம்’!