‘விபசார விடுதியில் சிக்கி தவிக்கும் பெண்களை காப்பாற்றுங்கள்’ மறுவாழ்வு பெற்ற பெண், பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம்

விபசார விடுதியில் சிக்கி தவிக்கும் என் போன்ற பெண்களை காப்பாற்றுங்கள் என்று கூறி மும்பையை சேர்ந்த பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதியிருக்கிறார்.

Update: 2017-08-08 23:50 GMT

மும்பை,

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மராட்டிய மாநில பாரதீய ஜனதா மகளிர் அணி தலைவியும், பெண்கள் கமி‌ஷன் தலைவியுமான விஜயா ரகத்கர், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து அவரது கையில் ராக்கி கயிறு கட்டினார்.

அப்போது, மும்பையை சேர்ந்த பெண் ஒருவர், தன்னிடம் ஒரு கடிதத்தை கொடுத்து தங்களிடம் கொடுக்க சொல்லியதாக கூறி, அந்த கடிதத்தை மோடியிடம் அவர் வழங்கினார். அந்த கடிதத்தில் அந்த பெண் கூறி இருப்பதாவது:–

நான் என்னுடைய இளம்வயதில் கடத்தப்பட்டு, விபசார விடுதியில் பணத்துக்காக விற்கப்பட்டேன். அங்கு நிலவும் கொடுமையான சூழலில் 6 ஆண்டுகளை கழித்தேன். என்னை தினமும் அடித்து சித்ரவதை செய்தார்கள். மிருகத்தை விட கேவலமாக நடத்தினார்கள்.

அங்கு இருந்து இனி வெளியில் வரவே முடியாது என்று எண்ணினேன். எல்லா நம்பிக்கையையும் இழந்தேன். இனி நம் வாழ்க்கை இங்கேயே முடிந்து போகும் என்று எண்ணி கதறி அழுதேன். ஒரு நாளில் தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் மும்பை போலீசார் அங்கு வந்து, அந்த இருண்ட உலகில் இருந்து என்னை மீட்டார்கள்.

எனக்கு புதிய வாழ்வை தந்தார்கள். நான் இப்போது மறுவாழ்வு பெற்று, ஒரு கடையில் பணிபுரிகிறேன். இப்போது என்னுடைய தேவை எல்லாம், ரக்ஷா பந்தன் தினமான இன்று, உங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இன்னமும் விபசார விடுதிகளில் நரக வேதனையை அனுபவிக்கும் உங்கள் சகோதரிகளின் மீட்பராக நீங்கள் செயல்படுங்கள். என்னை போல் அவர்களும் மீட்கப்பட்டு மறுவாழ்வு பெற வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார்.

இந்த கடிதத்தின் மீது பிரதமர் மோடி உறுதியாக நடவடிக்கை எடுப்பார் என்று பெண்கள் கமி‌ஷன் தலைவி விஜயா ரகத்கர் மும்பையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்