பஸ்களில் மடிக்கணினி திருடி வந்த 2 பேர் கைது வாங்கியவரும் சிக்கினார்

பஸ்களில் மடிக்கணினி திருடி வந்த 2 பேரும், அவர்களிடம் இருந்து திருட்டு மடிக்கணினியை வாங்கியவரும் கைது செய்யப்பட்டார்.;

Update: 2017-08-08 23:40 GMT
மும்பை,

புனேயில் இருந்து மும்பை வந்த சிவ்னேரி பஸ்சில் சம்பவத்தன்று பயணி ஒருவரின் மடிக்கணினி திருடப்பட்டது. இதுகுறித்து அந்த நபர் மாட்டுங்கா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிவ்னேரி பஸ்களில் பல பயணிகளின் மடிக்கணினி திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மும்பை- புனே சிவ்னேரி பஸ்சில் பயணிகள் போல சென்று கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பஸ்சில் பயணி ஒருவரின் மடிக்கணினியை திருட முயன்ற 2 பேரை கையும், களவுமாக போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தன்வீர் இக்பால் (வயது 30), மன்சூர் (30) என்பது தெரியவந்தது.

இவர்கள் சிவ்னேரி பஸ்களில் பயணிகள் போல பயணம் செய்வார்கள். இதில் ஒருவர் முன்இருக்கையிலும், மற்றொருவர் பின் இருக்கையிலும் உட்காருவார்கள். பின்னர் பஸ்சில் உள்ள பயணிகளின் உடைமைகளை நோட்டமிடுவார்கள். நள்ளிரவு நேரத்தில் பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பின்னால் அமர்ந்து இருப்பவர் மடிக்கணினி உள்ள பையை எடுத்து முன்னால் இருப்பவரிடம் கொடுப்பார். அவர் மடிக்கணினியை மட்டும் தனியாக எடுத்துவிட்டு மீண்டும் அந்த பையை இருந்த இடத்தில் வைப்பார்.
இந்த தகவல்கள் விசாரணையில் தெரியவந்தன.

திருடர்கள் 2 பேரும் திருட்டு மடிக்கணினிகளை மும்பையை சேர்ந்த ஹசன் ரியாசிடம் விற்பனை செய்து வந்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் இருந்து ரூ.5½ லட்சம் மதிப்பிலான 14 மடிக்கணினிகளை மீட்டனர்.

மேலும் செய்திகள்