அண்ணனுக்கு ராக்கி கட்ட மோட்டார்சைக்கிள் சென்ற போது பஸ் மோதியதில் பெண் சக்கரத்தில் சிக்கி பலி
மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதியதில் கீழே விழுந்த பெண் சக்கரத்தில் சிக்கி பலியானார். அவர் தனது அண்ணனுக்கு ராக்கி கட்ட சென்ற போது இந்த விபத்தில் சிக்கினார்.
மும்பை,
நவிமும்பை கோபர்கைர்னேவை சேர்ந்த பெண் கமல் ஷிண்டே (வயது42). இவர் அங்குள்ள திலிப்கோயல் என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரக்ஷாபந்தன் தினமான நேற்றுமுன்தினம் அவரது கணவர் வேலைக்கு சென்று விட்டார்.
கமல் ஷிண்டே காமோட்டேவில் வசிக்கும் தனது அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்ட விரும்பினார். திலிப்கோயல் நல்ல அறிமுகம் என்பதால் அவருடன் மோட்டார்சைக்கிளில் காமோட்டே நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சயான் – பன்வெல் நெடுஞ்சாலையில் கார்கர் ரெயில் நிலையம் அருகே பெல்பாடா பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் சி.பி.டி. பேலாப்பூரில் இருந்து கல்யாண் நோக்கி சென்று கொண்டிருந்த நவிமும்பை மாநகராட்சி பஸ் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் மோட்டார்சைக்கிளில் இருந்த இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர். துரதிருஷ்டவசமாக கமல் ஷிண்டே அந்த பஸ் சக்கரத்தில் சிக்கி கொண்டார். இதில் அவர் உடல் நசுங்கி பலியானார். திலிப்கோயல் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கமல் ஷிண்டேயின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.