கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை வைத்து பூஜை நடத்திய தொழில்அதிபர்

பெங்களூருவில் வரமகாலட்சுமி பண்டிகையையொட்டி கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை வைத்து தொழில்அதிபர் பூஜை நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2017-08-08 23:45 GMT

பெங்களூரு,

வரமகாலட்சுமி பண்டிகை கடந்த 4–ந் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் வீடுகளில் பெண்கள் வரமகாலட்சுமி பூஜை நடத்தினர். லட்சுமி சிலையை அலங்காரம் செய்து அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜைகளை நடத்தினர். இந்த நிலையில் வரமகாலட்சுமி பூஜை தொடர்பாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதில் லட்சுமி சிலைக்கு ஆடம்பரமான முறையில் அலங்காரம் செய்து, சிலையின் முன் பகுதியில் 2,000, 500, 100 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டும், கிலோ கணக்கில் தங்க நகைகள் குவித்து வைக்கப்பட்டும் உள்ளது. இது பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இந்த நிலையில் இவ்வளவு ஆடம்பரமான முறையில் வரமகாலட்சுமி பூஜையை நடத்தியவர் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அவர் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே–அவுட்டில் வசிக்கும் தொழில்அதிபர் சூரியநாராயண் என்பது தெரியவந்துள்ளது. அவருடைய தந்தை பெயர் ஆட்டோ கிருஷ்ணப்பா. சூரியநாராயண் ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில் செய்து வருகிறார். பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தால்(பி.டி.ஏ.) அமைக்கப்படும் லே–அவுட்டுகளில் வீட்டு மனைகள் விற்கும் புரோக்கராக செயல்படுவதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சூரியநாராயண் நிருபர்களிடம் கூறியதாவது:–

நான் வரமகாலட்சுமி பண்டிகையை முன்னிட்டு லட்சுமி பூஜையை நடத்தினேன். அப்போது ரூ.73 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டு கட்டுகளை வைத்தேன். 1 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை சாமி சிலை முன்பு வைத்து பூஜை செய்தேன். இந்த பணம் நான் சட்டப்படி சம்பாதித்தது. எனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வந்து பூஜை நடத்தினேன். இதற்கு உரிய ஆவணங்களை நான் வைத்துள்ளேன்.

நான் ஆண்டுதோறும் இவ்வாறு ரூபாய் நோட்டுகள், நகைகளை வைத்து வரமகாலட்சுமி பூஜை நடத்துகிறேன். அதே போல தான் இந்த ஆண்டும் பூஜை நடத்தினேன். எனது உறவினர்கள், நண்பர்கள் எனது வீட்டிற்கு வந்தனர். இந்த புகைப்படங்கள் எப்படி சமூக வலைதளங்களில் வெளியானது என்பது எனக்கு தெரியவில்லை. அந்த புகைப்படங்களை நான் பதிவேற்றம் செய்யவில்லை. வேறு யாரோ இதை செய்துள்ளனர். அவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது.

நான் ஆண்டுக்கு ரூ.83 லட்சம் வருமான வரி செலுத்துகிறேன். நான் தவறான வழியில் பணம் சம்பாதிக்கவில்லை. நான் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து முன்னேறி இருக்கிறேன். சாமிக்கு பூஜை செய்வது தவறா?. இதையே பெரிய வி‌ஷயமாக பேசுகிறீர்கள். பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தால் அமைக்கப்படும் லே–அவுட்டுகளில் வீட்டு மனைகளை விற்கும் புரோக்கர் தொழிலும் செய்கிறேன்.

ரியல் எஸ்டேட், கட்டிட வடிவமைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட பணிகளையும் செய்கிறேன். இது தொடர்பாக வருமான வரி விசாரணை உள்பட நான் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். எனக்கு எந்த பயமும் இல்லை.

இவ்வாறு சூரியநாராயண் கூறினார்.

இது தொடர்பாக சூரியநாராயண் மீது பெங்களூருவில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்